கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வெற்றிப் படமாக நடிகர் ரஜினிகாந்துக்கு அமைந்தது. அண்ணாத்த படம் சரியாக போகாத நிலையில் ஜெயிலர் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இந்த படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. இந்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் உடனடியாக இந்த படத்தின் 2ம் பாகத்தை இயக்கவும் இயக்குனர் நெல்சனை அறிவுறுத்தியது.
இதற்கு நடிகர் ரஜினிகாந்தும் ஒத்துக்கொண்ட நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன் ரஜினிகாந்த் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார்களை பரிசளித்தது குறிப்பிடத்தது. மேலும் இப்போது கூலி படத்துக்கு பின் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினி பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இந்த சூழலில் ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர் அதில் வில்லன் கேரக்டரில் கொடூரமான தனது நடிப்பை வெளிப்படுத்திய மலையாள நடிகர் விநாயகன்தான். உண்மையில் அவரது மிரட்டலான நடிப்புதான் படத்தை வேற லெவலில் ரசிகர்களிடம் கொண்டு சென்றது. அதனால் ஜெயிலர் 2 படத்தில் அவர் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகள் இடம்பெறவும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில் நடிகர் மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் வெளியான களம்காவல் என்ற படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 5ம் தேதி வெளியான இந்த படம் 3 நாட்களில் 31 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த படத்தில் ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகன் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் களம்காவல் படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை மம்முட்டி மற்றும் அவரது மகன் நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்நிலையில் களம் காவல் படம் குறித்து நடிகர் மம்முட்டி நடிகர் விநாயகனுடன் பேசிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் நடிகர் மம்முட்டி பேசியிருப்பதாவது, வணக்கம். நாங்கள் இருவரும் நடித்த களம் காவல் படத்தை மிகப்பெரிய வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி.
புதிய திறமைசாலிகள் பலருடன் சில அனுபவமிக்க கலைஞர்களின் கடின உழைப்பால் இந்த படத்தை உருவாக்கி உள்ளார்கள். ரசிகர்களுக்கு நன்றி. குறிப்பாக குடும்ப ரசிகர்களுக்கு மிகவும் நன்றி. வருங்காலத்திலும் இதே போல் நல்ல படங்களையே தருவோம் என்று நடிகர் மம்முட்டி கூறியிருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்திலும் விநாயகன் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.





