நடிகர் விஜய் நடித்த கடைசி படமாக ஜனநாயகன் வருகிற ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. வழக்கமாக விஜய் படம் என்றாலே பல நூறு கோடி ரூபாய் வசூலை அள்ளும் என்பதே கோலிவுட்டின் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே அவரது சுமாரான படங்கள் கூட பெரிய அளவில் வணிக ரீதியான வெற்றியை பெற்று வசூலை அள்ளியிருக்கின்றன.
உதாரணமாக மாஸ்டர் பீஸ்ட் வாரிசு லியோ தி கோட் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்த போதிலும் இந்த படங்களை பொருத்த வரை வணிக ரீதியாக பெரிய வசூலை குவித்த படங்களாக இருந்தன. அதனால் விஜய் படங்கள் தோல்வி படங்களாக சொல்லப்பட்டாலும் தயாரிப்பாளர்களுக்கு அது வெற்றிப் படங்களாகவே இருக்கின்றன.
இந்நிலையில் வருகிற ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் தலைவராக இப்போது விஜய் இருப்பதால் ஜனநாயகன் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பெறும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்களிடமும் தவெக கட்சியினரிடமும் காணப்படுகிறது.
அதே நேரத்தில் வருகிற ஜனவரி 10ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் ரிலீஸ் ஆக உள்ளதால், ஜனநாயகன் படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காமல் போகவும் பெரிய அளவில் வசூல் பாதிப்பும் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பராசக்தி படத்துக்கு அதிக எண்ணிக்கையில் பெரிய திரைகளை ஒதுக்க தியேட்டர் உரிமையாளர்களுக்கு படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி தரப்பில் அழுத்தம் தரப்பட்டுள்ளது.
இந்த சூழலில் மேலும் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அஜீத்குமார் நடித்த மங்காத்தா படத்தை ரி ரிலீஸ் செய்ய ரெட் ஜெயிண்ட் முவீஸ் முடிவு செய்துள்ளது. வருகிற ஜனவரி 23ம் தேதி அஜீத்குமார் நடித்த மங்காத்தா படம் ரி ரிலீஸாகிறது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த 50வது படம் இது. இது ஏகே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு வெற்றிப்படமாகும்.
வருகிற ஜனவரி 23ம் தேதி மங்காத்தா ரி ரிலீஸ் செய்யப்படுவதால், 9ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் ஜனநாயகன் படம் தொடர்ந்து 3 வாரங்கள் தியேட்டர்களில் ஓடுவதில் சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. நேற்று ஈரோட்டில் தவெக கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய், திமுகவை தீயசக்தி என்று விமர்சனம் செய்த நிலையில் ஜனநாயகன் படத்துக்கு இப்படி ஆளுங்கட்சி தரப்பில் நெருக்கடி தருவதாக ஒரு தகவல் பரவி வருகிறது.





