பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் திரைப்படத்திலேயே தனது திறமையை வெளிகாட்டிய இயக்குனர், அடுத்ததாக கர்ணன் மற்றும் மாமன்னன் திரைப்படங்களை இயக்கினார். இதில் கர்ணன் படத்திற்குப் பிறகு அவர் விக்ரமின் மகனை வைத்து படத்தை இயக்குவதாக தான் இருந்தது.
ஆனால் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் அந்த திரைப்படத்தை தள்ளி வைத்துவிட்டு, மாமன்னன் படத்தை இயக்கச் சென்றார். அதன் பிறகு கிடைத்த சிறு இடைவேளையில், வாழை என்னும் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கினார். இந்த திரைப்படத்தின் தொடக்க விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
மாரி செல்வராஜ் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் நடைபெற்றன. இதில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து இருக்கிறார்கள். இருப்பினும் சிறுவர்கள் மையப்படுத்திய இந்த திரைப்படம் நகர்வது அதன் போஸ்டரிலேயே உறுதியானது.
முதலில் இந்த திரைப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படுவதாக தான் அறிவிக்கப்பட்டிருந்தது. டிஸ்டி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் தான் இதனை தயாரித்தது. ஆனால் கடைசி நேரத்தில் திட்டம் கைவிடப்பட்டு, திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் இந்த படத்திற்கான வேலைகள் மிக மெதுவாகவே நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் தற்போது வாழை திரைப்படத்திலிருந்து தேன் சிட்டு என்னும் பாடல் வெளியாகி இருக்கிறது. இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தீ பாடி இருக்கிறார். முதல் பாடலே ரசிகர்கள் முணுமுணுக்கும் வகையில் அமைந்துள்ளது. முக்கியமாக பாடலில், அரசு பள்ளி ஆசிரியராக நிகிலா விமல் வருகிறார்.
அவரது மாணவனாக ஒரு சிறுவரை காட்டுகிறார்கள். பரியேறும் பெருமாள் திரைப்படத்தில், தனது பத்தாம் வகுப்பு டீச்சரை தேவதை என்று நாயகன் குறிப்பிட்டு இருப்பார். அதைத்தான் மாரி செல்வராஜ் இங்கு செய்திருப்பதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். முதல் பாடல் தரமாக வந்திருக்கும் நிலையில், வாழை திரைப்படம் அடுத்த மாதம் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்கிறது.





