சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் சம்பளம் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. படத்தின் நாயகன் நாயகி இசையமைப்பாளர் டைரக்டர் ஒளிப்பதிவாளர் என பலரும் கோடிகளில் சம்பளம் வாங்கும் நிலையில், 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் படத்தில், சம்பளமே 250 கோடி ரூபாய் சம்பளமாகவே போய்விடும் அளவுக்கு நிலமை கைமீறி போயிருக்கிறது.
இதுகுறித்து வீடியோ ஒன்றில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி கூறியதாவது, வளரும் இளம் நடிகர்களாக உள்ள கவின், அசோக் செல்வன் போன்றவர்கள் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்கின்றனர். அசோக் செல்வன் போர்த்தொழில் என்ற ஹிட் படத்தை மட்டுமே தந்திருக்கிறார். கவின் நடித்த பெக்கர் படம் சரியாக போகவில்லை. அவர் நடித்த கிஸ் படத்தை வாங்க ஆளில்லை.
ஆனாலும் சம்பளத்தை பல கோடிகளில் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழ் சினிமாவில் தற்போதைய நிலவரப்படி கடந்த ஓராண்டில் மட்டும் ஹீரோக்களின் சம்பளம் 70 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஆனால் அவர்கள் பெரிய ஹிட் படங்கள் கொடுத்தார்களா, என்றால் அது சுத்தமாக இல்லை.
வழக்கமான ஒரு படம் ஹிட் ஆனால் ஒரு ஹீரோ சம்பளம் உயர்த்துவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் தோல்வியடைந்த படங்களை தந்துவிட்டும் ஹீரோக்கள் சம்பளத்தை கணிசமாக உயர்த்துகின்றனர். ஆனால் இதில் தயாரிப்பாளர்கள் பக்கமும் பெரிய மிஸ்டேக் இருக்கிறது. அவர்கள்தான் கேட்ட சம்பளத்தை ஹீரோக்களுக்கு தூக்கி கொடுத்து விடுகின்றனர்.
நியாயமாக பார்த்தால், நீங்கள் கடைசியாக நடித்த படம் சரியாக போகவில்லை. எப்படி சம்பளத்தை உயர்த்தி கேட்கிறீர்கள் என்று கேட்க வேண்டும். ஆனால் ஹீரோ கால்ஷீட் கிடைத்தால் போதும் என்று தயாரிப்பாளர்கள் சம்பளத்தை யோசிக்காமல் கேட்கிற சம்பளத்தை தந்து விடுகின்றனர். ஆனால் படத்துக்கு படம் அவர்கள் பலத்த நஷ்டத்தை தான் சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலை கண்டிப்பாக மாற வேண்டும். இப்போதும் தெலுங்கில் சில ஹீரோக்கள் தங்களது படம் சரியாக போகாவிட்டால் சம்பளத்தில் பல கோடிகளை குறைத்துக்கொள்கின்றனர். அவர்களை பார்த்தாவது தங்களது வழக்கத்தை தமிழ் ஹீரோக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். சம்பளத்தை உயர்த்தும் விஷயத்தில் பெரிய நடிகர்களை பார்த்து சின்ன நடிகர்களும் கூட இதே பார்மூலாவை பின்பற்றுகின்றனர். முதலில் நடிக்கும் படத்தின் கதையில் ஹீரோக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று வலைப்பேச்சு ஜெ பிஸ்மி ஆவேசமாக பேசியிருக்கிறார்.





