அண்மையில் தமிழக வெற்றி கழகம் என்னும் தனது அரசியல் கட்சியை தொடங்கி அதில் விறுவிறுப்பாக பயணித்து வருகிறார் விஜய். அரசியல் கட்சியை அறிவித்த நாளன்றே, இனி திரைப்படங்களில் தான் நடிக்கப் போவதில்லை என்றும், முழு நேர அரசியலில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அவர் சொன்னபடியே தற்போது சற்று தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவர் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்த விஜய்யின், அண்மையில் நீட் தேர்வு குறித்தும் பேசினார். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில், தொகுதிவாரியாக அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு அவர் பரிசு வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து தனது குரலை பதிவு செய்தார் விஜய். தளபதி விஜய் அப்படி பேசியதை யாரும் எதிர்பார்த்து இருக்கவே மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை விமர்சித்து இருந்தார்.
இது ஒரு புறம் இருக்க நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். தற்போது அவர் நடிப்பில் கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக பிரசாந்த் பிரபுதேவா லைலா சினேகா உள்ளிட்டோர் இடம் பெற்றிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.
இதில் விஜய்க்கு இரண்டு வேடம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவரின் பிறந்தநாளை ஒட்டி வெளியான வீடியோவில் அது உறுதிப்படுத்தப்பட்டது. டைம் டிராவல் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை எடுத்திருக்கும் வெங்கட் பிரபு, அதில் பல சுவாரஸ்யங்களையும் ரசிகர்களுக்காக வைத்திருக்கிறார். குறிப்பாக மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏ ஐ தொழில் நுட்பத்தின் மூலம் திரையில் காட்ட இருக்கிறார் வெங்கட் பிரபு. இது போக ஐபிஎல் வீரர்களும் ஒரு காட்சியில் வருவதாக கூறப்படுகிறது.
இந்தத் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. இதன் பிறகு, விஜய் தனது கடைசி படத்தில் எச் வினோத்துடன் பணியாற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை முழுக்க முழுக்க அரசியல் படமாக எடுக்க வினோத் திட்டமிட்டுள்ளாராம். படத்தில் சமந்தா நடிப்பதாகவும் ஒரு பேச்சு எழுந்தது. இந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இந்த திரைப்படத்தில் இணைய இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இருவரும் இணைந்து கடைசியாக ஜில்லா படத்தில் நடித்தார்கள். 2014 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இதை இணை சேர இருப்பது மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.





