விஜய் நடித்த லியோ படம் சார்ந்த பல பஞ்சாயத்துக்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஒருபுறம், படத்தின் பின்பகுதியில் மன்சூர் அலிகான் சொல்லும் பிளாஸ்பேக் பொய்யானது என்ற தகவல் பரவி வருகிறது. அப்படி ஒரு பொய்யான, அபத்தமான பிளாஸ்பேக் அவசியம்தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
படத்தின் உண்மையான பிளாஸ்பேக்கே அதுதான். நரபலி என்ற மூடநம்பிக்கை விஷயத்தை கொண்டு வந்ததால், ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியை அடுத்து, அது பொய்யான பிளாஸ்பேக் என படக்குழுவினர் கம்பி கட்டுவதாகவும் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.
படத்தின் பாதி வரை இயக்கியது லோகேஷ் கனகராஜ், மீதியை இயக்கியது ரத்னக்குமார்தான். அதனால் தான் படத்தின் முன்பகுதி விறுவிறுப்பாகவும், பின்பகுதி வழக்கமான விஜயின் மசாலா படமாக மாறிவிட்டது. இதில் விஜய் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டு, படத்தின் கதை காணாமல் போய்விட்டது என்று கூறுகின்றனர்.
இப்போது லியோ படம் வெளியான 12 நாட்களில்,. 540 கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்த நிலையில், படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டுள்ளது. ஆனால், லியோவின் உண்மை வசூல் அதுவல்ல, என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் நடிகர் மீசை ராஜேந்திரன். இவர் ஜெயிலர் படத்தின் வசூல் ரூ. 525 கோடியை சாதனையை லியோ முந்தினால், மீசையை எடுத்துக்கொள்வதாக சவால் விட்டவர்.
சமீபத்திய நேர்காணலில் மீசை ராஜேந்திரன் கூறியதாவது, லியோ படத்தை பொருத்தவரை, ஜெயிலர் படத்தை விட 15 கோடி முதல், 25 கோடி ரூபாய் வசூலை அதிகரித்துச் சொல்வார்கள் என்று முதலிலேயே சொன்னேன். அதுதான் நடந்திருக்கிறது. லியோ படக்காட்சிகள் பல தியேட்டர்களில் குறைக்கப்பட்டது. காட்சிகள் நிறுத்தப்பட்டுள்ளது. படம் ரிலீசான 4வது நாளில் இருந்தே காற்று வாங்குகிறது. அப்புறம் எப்படி இத்தனை கோடி வசூல் ஆகும்?
கர்நாடகாவில் லியோ படத்தை வாங்கிய நண்பர் ஒருவர், இதுவரை செய்த முதலீடு போக, 60 லட்சம் ரூபாய் தான் இதுவரை லாபம் வந்துள்ளது என்கிறார். அந்த கணக்குப்படி பார்த்தால், தமிழகத்தில் 200 கோடி ரூபாய் வசூலை கூட லியோ தாண்டி இருக்காது. அவர்கள் கூறும் 540 கோடி ரூபாய் வசூல் என்பதில், பாதி வசூல் கூட லியோவுக்கு வந்திருக்காது. ஒரு பொய்யை மறைக்க பல பொய்கள் சொல்றாங்க. முதல் நாள் வசூல் 148 கோடி ரூபாய் என்பதையே, தயாரிப்பாளர் லலித்குமார் பிளான் பண்ணித்தான் சொன்னார். அதுபோல் இதுவும் பிளான் பண்ணி சொன்ன பொய் கதை தான் என்று கூறி இருக்கிறார் மீசை ராஜேந்திரன்.





