சினிமாவில் வரும் காட்சிகள் படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் நீண்டகாலத்துக்கு பசுமரத்து ஆணி போல அப்படியே நிரந்தரமாக தங்கி விடுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த படத்தின் சில காட்சிகளை சில வசனங்களை கூட சிலர் அழகாக பேசி அசத்தி விடுகின்றனர். அதற்கு காரணம், அந்தளவுக்கு அந்த காட்சி மனதில் ஏற்படுத்திய தாக்கம்தான்.
பொதுவாக சினிமாவில் புகை பிடித்தல் மது அருந்துதல் மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துதல் போன்ற காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்றுதான் உலக சுகாதாரத்துறை மக்களின் ஆரோக்கியம் கருதி தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனால் இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே காலம் காலமாக தொடர்கிறது.
திரையில் புகை பிடிக்கும் காட்சிகள் வரும்போது, புகை பிடிப்பது உயிரை கொல்லும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் வருகின்றன. ஆனால் அதை பார்த்து எத்தனை பேர் சிகரெட் புகைப்பதை தவிர்த்தார்கள் என்பதற்கான ஆதாரம் இல்லை. அதே நேரத்தில் நடிகர் சிவாஜி கணேசன் துவங்கி ரஜினி கமல் விஜயகாந்த் விஜய் அஜீத்குமார் சத்யராஜ் பிரபு சூர்யா என பல முன்னணி நடிகர்கள் சிகரட் பிடிக்கும் காட்சிகளில் நடித்திருக்கின்றனர்.
அதிலும் புதிய பறவை வசந்த மாளிகை போன்ற படங்களில் சிவாஜி கணேசன் வரும் காட்சிகளில் சிகரட்டை புதைத்து புதைத்து புகை மண்டலமாகவே காட்சி தருவார். வாழ்வே மாயம் படத்தில் கமல் சிகரட் புகைக்காமல் நடித்த காட்சிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். சிகரட் பிடிப்பதையே ஸ்டைலாக்கி ரசிகர்களை கவர்ந்தவர் ரஜினிகாந்த். பலரது சிகரட் புகைக்கும் பழக்கத்துக்கு வித்திட்ட பெருமை ரஜினிக்கே சேரும்.
இப்போதைய நடிகர்களில் ராமராஜன் சிவகார்த்திகேயன் போன்றவர்கள் சிகரட் புகைத்தல் மது அருந்துதல் போன்ற காட்சிகளில் நடிக்காமல் தவிர்த்து வருகின்றனர். தனது ரசிகர்கள் தன்னை பார்த்து கெட்டுப்போக கூடாது என்பதில் ஒரு கொள்கையாக இருக்கின்றனர். இதே போல் இருந்தவர்தான் மக்கள் திலகம் எம்ஜிஆர். அவரும் தனது படங்களில் புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற காட்சிகளை கட்டாயமாக தவிர்த்தார்.
ஆனால் எம்ஜிஆரும் ஒரே ஒரு படத்தில் சிகரட் புகைப்பது போன்ற காட்சியில் நடித்திருக்கிறார். அது கடந்த 1952ம் ஆண்டில் வெளியான அந்தமான் கைதி என்ற படம்தான். காம்பவுண்ட் சுவர் கேட்டை திறந்துக்கொண்டு வரும் எம்ஜிஆர் வாயில் சிகரட்டை புகைத்து புகையை வெளியிட்டபடி வருவார். அதுவே அவர் அப்படி நடித்த ஒரே படம். பிறகு அதை தனது படங்களில் நடிகர் எம்ஜிஆர் தனது ரசிகர்களின் நலனுக்காக முற்றிலுமாக தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





