காமெடி நடிப்பில் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் மிர்ச்சி சிவா. சென்னை 28, சென்னை 28 படம் 2ம் பாகம், தமிழ் படம், தமிழ்படம் 2, கலகலப்பு, கலகலப்பு 2, வ குவாட்டர் கட்டிங், தில்லு முல்லு, சரோஜா, யாயா உள்ளிட்ட பல படங்களில் மிர்ச்சி சிவா நடித்திருக்கிறார். பெரும்பாலும் காமெடி கலந்த காதல் படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
மிர்ச்சி சிவா நடித்த படங்களில் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படம் தமிழ்ப்படம். இதுவரை தமிழில் வெளியான படங்களை எல்லாம் கலாய்த்து எடுக்கப்பட்ட இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனே பாராட்டியிருந்தார். தமிழ் சினிமா படங்களில் உள்ள அபத்தங்களை எல்லாம் காமெடியாக சொல்லி அந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது.
மிர்ச்சி சிவா திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையை சேர்ந்தவர். ஆரம்பத்தில் வானொலி அறிவிப்பாளராக இருந்ததால் மிர்ச்சி சிவா என அழைக்கப்படுகிறார். சினிமாவில் அதிக படங்களில் நடிக்காவிட்டாலும், அவர் சில காட்சிகளில் வந்தாலும் அந்த படத்தில் பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று விடுகிறார்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மிர்ச்சி சிவா கூறியதாவது, ஒருமுறை எனது நண்பர்கள், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா போன்றவர்கள் சொன்னதால் நான் சொந்தமாக ஒரு பிஎம்டபிள்யு கார் வாங்கினேன். ஒருமுறை சென்னையில் பலத்த மழை பெய்து பெரிய வெள்ளம் ஏற்பட்டது.
அப்போது என் வீட்டின் கீழ் நிறுத்தப்பட்டிருந்த எனது ஆடி காரை அப்படியே மழை வெள்ளத்தில் இழுத்துச் சென்றது. அப்படியே வெள்ளத்தில் கார் மூழ்கி விட்டது. மூழ்கும்போது காரின் விளக்குகள் எரிந்து எரிந்து அணைந்ததை பார்த்து நான் சிரித்துக்கொண்டே இருந்தேன். அப்போது என் பக்கத்தில் இருந்தவர்கள், என்னை பார்த்து திட்டினார்கள்.
உன்னோட விலை உயர்ந்த கார் இப்படி தண்ணீல இழுத்துட்டு போகுதே, என்று கவலையாக பேசினார்கள். நான் அப்போது அவர்களிடம், அந்த காரை யாராவது எடுத்துட்டு போனா, திருடீட்டு போனா நான் போய் அவர்களை ஏன், என் காரை எடுக்கறீங்க என்று கேட்கலாம். ஆனா இயற்கை தான் இந்த காரை எனக்கு கொடுத்தது. இப்போது அந்த இயற்கையே காரை எடுத்துட்டு போகுது, இதுல எனக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லே, என்று கூறியதாக அந்த நேர்காணலில் மிர்ச்சி சிவா வெளிப்படையாக பேசியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.





