பிரபா தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மோனிஷா பிளசி. ஏற்கனவே கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தாலும் அவரை ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்திய நிகழ்ச்சி “குக் வித் கோமாளி” தான். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற அவரது நகைச்சுவையான செயல்பாடுகள் அனைவரது மத்தியிலும் பாராட்டை பெற்றது.

அதோடு அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “மாவீரன்” படத்திலும் அவரது தங்கச்சியாக நடித்திருந்தார். சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு துணை கதாபாத்திரங்களில் மெல்ல மெல்ல நடிக்க துவங்கியுள்ள மோனிஷா பிளசி தற்போது முதுகலை படிப்பில் தான் படித்த பல்கலைக்கழகத்திலேயே முதல் மதிப்பெண்ணை பெற்றிருக்கிறார் என்ற செய்தியை அவரது சமூக வலைதள பக்கத்தின் மூலம் பகிர்ந்துள்ளார்.
மேலும் தான் படிக்கும் போது என்னென்ன கஷ்டங்களை பட்டேன் என்பது குறித்து மோனிஷா பிளசி பேசியிருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் ஏழாம் வகுப்பு வரை சுமாராகத்தான் படித்து வந்தேன். ஆனால் அதன் பிறகு படிப்பிலும் சரி மற்ற விடயங்களிலும் சரி நல்ல கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பத்தாம் வகுப்பு வரை செயின்ட் ஜோசப் அகாடமி ஸ்கூலில் படித்தேன்.

அதன் பிறகு செயின்ட் தாமஸ் ஸ்கூலில் படித்தேன். பத்தாவது வகுப்பில் 473 மார்க் எடுத்திருந்தாலும், 12-ஆம் வகுப்பில் 833-மார்க் தான் வாங்கி இருந்தேன். அதன் பிறகு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு ஐடி கம்பெனிக்கு செல்லலாம் என்று ஆசைப்பட்டேன். ஆனால் எனது அப்பா அதெல்லாம் செட் ஆகாது என்று கூறிவிட்டார். பிறகு ஆதித்யா சேனலுக்கு விஜே-வாக சென்று வந்ததால் விஸ்காம் படிக்கலாம் என்று நினைத்தேன். அப்போதும் என் அப்பா எலக்ட்ரானிக் மீடியா எடுத்து படின்னு சொன்னார்.
அதன்பிறகு அதே போன்று நான் படித்தேன். இன்று எனது யுனிவர்சிட்டியில் முதல் மதிப்பெண் பெற்றதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆரம்ப கட்டத்தில் நான் ஸ்கூல் பீஸ் கட்டவே கஷ்டப்பட்டு இருக்கிறேன். கடைசி நேரத்தில் தான் எப்படியோ கடன் வாங்கி பீஸ் கட்டுவாங்க. நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்கு நல்லா தெரியும். அதனால தான் நல்லா படிக்கனும்னு நினைத்தேன். லாக் டவுன் அப்ப கூட நாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம் இப்போ ஓரளவு எல்லாம் மாறியிருக்கு என மோனிஷா பிளஸி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.





