தமிழ் சினிமாவில் ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. ஆரம்பத்தில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர். ராஜா ராணி படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் நடித்த தெறி மெர்சல் பிகில் படங்களை இயக்கினார்.
இந்த 3 படங்களுமே சூப்பர் ஹிட் படங்களாக அட்லிக்கு நட்சத்திர இயக்குனர் அந்தஸ்தை பெற்றுத் தந்தது. இவர் மற்ற படங்களை பார்த்து காப்பியடித்து தனது படங்களை உருவாக்குவதாக ஒரு புகார் இருந்தாலும் அவரது படங்களை ரசிகர்கள் எப்படியும் ஜெயிக்க வைத்து விடுகிறார்கள். அப்படி தான் அவரது படங்கள் தொடர்ந்து ஜெயிக்கின்றன.
பிகில் படத்துக்கு பிறகு இந்தியில் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தை அட்லி இயக்கினார். அந்த படமும் ரூ. 1150 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. இதனால் இந்திய அளவில் ரூ. 100 கோடி சம்பளம் வாங்கும் ஒரு நட்சத்திர இயக்குனராக அட்லி மாறிவிட்டார்.
இதைத் தொடர்ந்து இயக்குனர் அட்லி இயக்கும் 6வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ. 600 கோடி பொருட்செலவில் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறது. இந்த படத்தில் ஐகான் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜூன் ஹீரோவாக 3 வேடங்களில் நடிக்கிறார். இது அவரது 22வது படமாக உள்ளது.
இந்த படத்தில் தீபிகா படுகோனே ஜான்வி கபூர் ராஷ்மிகா மந்தனா உட்பட 5 கதாநாயகிகள் நடிப்பதாக தகவல் வெளியானது. இதில் நடிகை மிருணாள் தாகூரும் ஒருவர் என்றும் தகவல் கிடைத்தது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட நடிகை மிருணாள் தாகூரிடம் அட்லி இயக்கும் படத்தில் நீங்களும் நடிப்பது உண்மையா என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த மிருணாள் தாகூர், அப்படியா… உண்மையாகவா? அந்த படத்தில் நான் நடிக்கிறேனா? அப்படி நடக்க வேண்டும் என்று நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள். அது நடந்தால் எல்லோரும் கொண்டாடலாம் என்று கிண்டலாக கூறியிருக்கிறார். அவரது இந்த பதிலால் அட்லி இயக்கத்தில் மிருணாள் தாகூர் நடிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.





