சினிமா அரசியல் என பொது வாழ்க்கைக்கு வந்து விட்டாலே விமர்சனங்கள் என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. ஒரு அரசியல் தலைவராக ஒரு சினிமா நடிகராக உள்ள விஜய் தொடர்ந்து பலவிதமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். சட்ட ரீதியான போராட்டங்களையும் அவர் சந்தித்து வருகிறார்.
கடந்த பொங்கல் பண்டிகைக்கு மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட அவரது படம் ஜனநாயகன் திரைக்கு வரவில்லை. முதலில் இந்த படத்துக்கு யு/ஏ சான்றிதழ் தருவதாக உறுதியளித்த சென்சார் போர்டு பிறகு திடீரென படத்தை மறு ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறியது. ரிலீஸ் தேதி நெருங்கிய நிலையில் சென்சார் போர்டு சான்றிதழ் தராமல் இழுத்தடித்தது.
இந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்றம் டெல்லி சுப்ரீம் கோர்ட் வரை சென்று திரும்பிய நிலையில் இன்னும் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. ஜனநாயகன் படம் இன்னும் ரிலீஸ் தேதி உறுதியாகவில்லை. இது விஜய் ரசிகர்களை அப்செட் செய்துள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விஜய் இந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.
ஜனநாயகன் படம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான படம். மத்திய அரசு மாநில அரசு குறித்து விமர்சனம் செய்யும் காட்சிகள் படத்தில் வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் தனது படம் திரைக்கு வராமல் தடுப்பது குறித்து விஜய் எதுவுமே பேசாதது கடும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் திரை பிரபலங்கள் பேசிய நிலையில் சம்பந்தப்பட்ட விஜய் வாய் திறக்கவில்லை.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இதுகுறித்து கூறியதாவது, விஜய் ஒரு கோழை. வலுவே இல்லாத தொடை நடுங்கி. அனைவரையும் பேச விட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பது கொடூரமான மனநிலை. ஜனநாயகன் படம் வராததால் அவரது ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இவரோ வாயே திறக்காமல் இருக்கிறார். படம் ரிலீஸ் ஆகவில்லை என்று அவரது ரசிகர்கள் போராடுகிறார்கள். அவர்களுக்கு அறிவுரை சொல்லவாவது வாயை திறக்க வேண்டும். சொந்த பிரச்சினைக்கே போராடாத இவர் எப்படி மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுவார்? மன உறுதியோ தெளிவோ வலிமையோ எதுவுமே இல்லாதவர் விஜய் என்று ஜேம்ஸ் வசந்தன் அந்த நேர்காணலில் கோபமாக பேசியிருக்கிறார்.





