இயக்குனர் மிஷ்கின், அவரது இயக்கத்தில் வெளியான படங்கள் என்றாலே நிச்சயமாக படம், ரசிகர்களிடம் பேசும். அந்தளவுக்கு அவரது இயக்கம் வேற லெவலில் இருக்கும். சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். நரேன் – பாவனா நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
அடுத்து அவர் இயக்கிய படம் அஞ்சாதே. இளம்பெண்களை கடத்தி பணம் பறிக்கும் கும்பல்களை மையப்படுத்திய கதை. இதில் மென்மையான நடிகர் பிரசன்னாவையும், காமெடி செய்யும் நடிகர் பாண்டியராஜனையும் பயங்கர வில்லன்களாக காட்டியிருந்தார். இதிலும் நரேன்தான் கதாநாயகன். அஜ்மல் நடிப்பும் வித்யாசமாக இருந்தது. விஜயலட்சுமி நடிப்பும் கவனம் ஈர்த்தது.
இதையடுத்து நந்தலாலா என்ற படத்தில், மிஷ்கினே நடித்து இயக்கி இருந்தார். இந்த படத்தில் செக்யூரிட்டி உடையில் பேண்டை தூக்கி பிடித்தபடி அவரது நடிப்பும், வயதான தாயை தேடி அவரும், தன் இளம் தாயை தேடி மாணவனும் பயணிப்பதே இந்த படத்தின் கதை. இதுவும் வேற லெவலில் பேசப்பட்ட படமாக, பலரையும் ஈர்த்தது. திரைப்படைப்பாளிகள் மத்தியில் மிஷ்கின் சிறந்த நடிகர் என்ற பெயரையும் பெற்றுத் தந்தது.
இந்நிலையில் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி, அஞ்சாதே குறிப்பாக நந்தலாலா ஆகிய படங்களை பார்த்த நடிகர் கமல்ஹாசன், மிஷ்கினை அழைத்து பாராட்டியிருக்கிறார். இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் என்று பேசியிருக்கிறார். எனக்கான கதையை தயார் செய்யுங்கள் என்றும் கூறியிருக்கிறார்.
அதன்படி கமலுக்காக மூன்று கதைகளை ரெடி செய்து கொண்டு போய் காட்டியிருக்கிறார் மிஷ்கின். அதில் ஒரு கதை மிகவும் பிடித்துப் போய் அதை செய்யலாம் என்று கமலும் ஓகே சொல்லியிருக்கிறார். புத்தரின் பல்லை மையமாக வைத்து சொல்லப்பட்ட கதை வரலாற்று பின்னணி கொண்டது.
இந்த படத்தின் கதை குறித்த டிஸ்கஷன் 40 நாட்கள் வரை நடந்திருக்கிறது. அப்போது அந்த கதையில் ஏகப்பட்ட திருத்தங்கள், மாற்றங்களை கமல் கூறியிருக்கிறார். இதனால் ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் விரக்தியடைந்த மிஷ்கின், ஒரு படைப்பாளியாக, இயக்குனராக இது என் கதை. என் விருப்பப்படி வந்தால்தான் அது என்னுடைய படமாக இருக்கும். என் கதையில் எந்த சமரசம் யாருக்காகவும் செய்ய மாட்டேன் என மறுத்துவிட்டு, டிஸ்கசனை விட்டு வெளியேறி இருக்கிறார் மிஷ்கின். அதன்பிறகு கமலை வைத்து படம் இயக்கும் எண்ணமே மிஷ்கினுக்கு வரவில்லை.





