பிரபல தெலுங்கு நடிகரான நானி, தமிழில் நேரடியாக நடித்த திரைப்படம் “நான் ஈ”. இத்திரைப்படம் தமிழ்நாட்டில் மாஸ் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து “ஆஹா கல்யாணம்” என்ற தமிழ் திரைப்படத்தில் நானி நடித்தார். ஆனால் அதனை தொடர்ந்து நானி தமிழில் படங்களே நடிக்கவில்லை. சமீபத்தில் கூட அவர் தெலுங்கில் நடித்த “அண்டே சுந்தரநிக்கி”, “தசரா” ஆகிய திரைப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. நானி தற்போது “ஹாய் நன்னா” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அவரது 30 ஆவது திரைப்படமாகும்.

நானி தெலுங்கு நடிகராக இருந்தாலும் தமிழில் அவரை ரசிக்ககூடியவர்கள் பலர் உண்டு. அவரது திரைப்படங்கள் தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெறுகிறது. ஆனால் நானி தமிழ் சினிமா பக்கமே வரக்கூடாது என்று முடிவெடுத்துள்ளாராம்.
அதாவது பல தமிழ் இயக்குனர்கள் அவரை தமிழ் சினிமாவில் நடிக்க அழைத்தும் அவர் வர மறுக்கிறாராம். ஆனால் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க மட்டும் நானி தயாராக இருக்கிறாராம். ஆனால் சுதா கொங்கரா தற்போது ஹிந்தியில் “சூரரை போற்று” திரைப்படத்தின் ரீமேக்கை படமாக்கி வருகிறார். அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார்.

ஆதலால் இனி ஒன்றரை வருடங்களுக்கு நானி-சுதா கொங்கரா கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டு நானி ரசிகர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர். எனினும் நானி இவ்வாறு கூறியதை கேள்விபட்ட சுதா கொங்கரா, “எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. ஆனால் ஒன்றரை வருடங்கள் வேறு புராஜெட்களில் பிசியாக இருக்கிறேன். அதன் பிறகு வாய்ப்பு வரும்போது நிச்சயம் இணைந்து பணியாற்றலாம்” என்று கூறியிருக்கிறாராம்.





