ஜெயிலர் படம் வெற்றியை தொடர்ந்து அடுத்து நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடந்தது. வேட்டையன் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் தற்போது நடந்து வருகிறது. கூலி படத்தில் நடிகர்கள் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் மீண்டும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த அக்டோபர் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்துக்கு வருகிற 2025ம் ஆண்டு தமிழ் சினிமாவில் பொன்விழா ஆண்டாக அமைகிறது. அவர் 1975ம் ஆண்டில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து இதுவரை 170 படங்களில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த், தனது 50வது பொன்விழா ஆண்டை அடுத்த ஆண்டு கொண்டாடுகிறார்.
பொன்விழா ஆண்டில் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக, அடுத்த ஆண்டில் ரஜினிகாந்த் தன்னுடைய நடிப்பில் வெளிவந்த இரண்டு படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, அதற்கு ஏற்ப செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் கூலி படமும், ஜெயிலர் 2 படமும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் வகையில் அவர் இரண்டு படத்தின் படப்பிடிப்புகளும் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். அதனால் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு கூலி படமும், தீபாவளிக்கு ஜெயிலர் 2 படமும் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்த படங்களை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மூன்று தயாரிப்பு நிறுவனங்களிடம், மூன்று படங்களில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் என மூன்று தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்கனவே ரஜினி ஒத்துக் கொண்ட நிலையில், இப்போது வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் 2018. இந்த படத்தின் இயக்குனர் ஜூட் அந்தோணி ஜோசப் இயக்கத்தில், வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் சம்பளம் பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட இழுபறியால் சிம்பு அந்த படத்தில் நடிக்காமல் ஒதுங்கிக் கொண்டதாக தெரிகிறது. இப்போது அந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2018 என்ற சூப்பர் ஹிட் படம் தந்த மலையாள இயக்குனர் படத்தில் நடிக்காமல் சிம்பு நழுவ விடுவது, ரசிகர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.





