இயல் இசை நாடகம் என எந்த துறை சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒரு திறமையான கலைஞனுக்கு பார்வையாளர்கள் தரும் கைதட்டல்தான் மிகப்பெரிய பரிசு. அதையும் கடந்து மத்திய மாநில அரசுகள் சார்பிலோ பல்வேறு கலை இலக்கிய அமைப்புகள் சார்பிலோ தரப்படும் விருதுகள் ஒரு அங்கீகாரமாக பெருமையாக இருக்கின்றன.
அந்த வகையில் சினிமா மற்றும் நாடகம் சார்ந்த கலைஞர்களும் இலக்கிய துறையில் சாதித்து வரும் எழுத்தாளர்களும் இசைத்துறை சார்ந்த கலைஞர்களுக்கும் பல்வேறு விருதுகளை ஆண்டுதோறும் அரசு துறைகள் வாயிலாகவும் பல்வேறு கலை இலக்கியம் இசை சார்ந்த அமைப்புகளாலும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்திய சினிமாவில் பழம்பெரும் நடிகராக இருப்பவர் நஸ்ருதீன்ஷா. தனது இயல்பான நடிப்பால் உலகளவில் அடையாளம் காணப்படும் இந்திய நடிகர்களில் மிகவும் முக்கியமான ஒருவராக இருக்கிறார். அவரது சிறந்த நடிப்பாற்றலை பாராட்டி இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மவிபூஷன் உள்ளிட்ட விருதுகளை அவர் பெற்றிருக்கிறார்.
பாலிவுட்டில் மூத்த நடிகர் நஸ்ருதீன்ஷா திரைப்பட விருதுகள் குறித்த தனது விவகாரமான ஒரு கருத்தை இப்போது வெளிப்படுத்தி இருக்கிறார். சமீபத்தில் இது குறித்து பேசிய நடிகர் நஸ்ருதீன் ஷா கூறுகையில், எல்லா நடிகர்களுமே ஒரு குறிப்பிட்ட கதையில் கேரக்டராக மாறி அந்த கதையில் மக்களுக்கு உணர்த்தும் வகையில் நடிக்கின்றனர். அவர்களை அழைத்து அவர்களில் ஒருவரை சிறந்தவர் என விருது கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்?
நான் சமீபமாக எனக்கு தரப்பட்ட பிலிம்பேர் விருது நிகழ்ச்சிகளுக்கு செல்லவில்லை. ஏற்கனவே வாங்கிய விருதுகளை நான் கட்டிய பண்ணை வீட்டின் கழிவறைக்கு கைப்பிடியாக அமைத்திருக்கிறேன். கழிப்பறை செல்லும் நீங்கள் எவரும் இரண்டு முறை உங்கள் கையால் விருதை பெற முடியும் என்று பிலிப்பேர் உள்ளிட்ட சினிமாத்துறை சார்ந்த விருதுகளை நஸ்ருதீன்ஷா கிண்டல் செய்து இருந்திருக்கிறார்.
அதே நேரத்தில் இந்திய அரசால் வழங்கப்பட்ட பத்ம விருதுகளை பெற்றதே தன் வாழ்வின் சிறந்த மதிப்பு வாய்ந்த தருணம் என்றும் அவர் பேசியிருக்கிறார். நான் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளை பெற்றபோது என் தொழில் வாழ்க்கையை பற்றி எப்போதும் கவலைப்பட்ட என் மறைந்த தந்தையை நினைவு கூர்ந்தேன். அந்த மரியாதைகளை பெற நான் ராஷ்டிரபதி பவனுக்கு சென்றபோது நான் மேலே பார்த்து, என் தந்தையிடம் இதையெல்லாம் பார்க்கிறீர்களா என்று கேட்டேன். அந்த நேரத்தில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என்று நான் நம்புகிறேன் என்று நஸ்ருதீன் ஷா கூறியுள்ளார்.





