நடிகை நதியா ஃபாசில் இயக்கிய பூவே பூச்சூடவா படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். முதல் படமே மெகா ஹிட்டானது.ஒருபக்கம் ஃபாசிலின் மேக்கிங்கும்,கதையும் ஹிட்டடிக்க மறுபக்கம் நதியாவின் அழகும், நடிப்பும் ரசிகர்களால் அதிகமாகவே ரசிக்கப்பட்டது. முதல் பட வெற்றிக்கு பிறகு நதியாவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தன.
அப்படி அவர் வந்த வாய்ப்புகளை எல்லாம் தேர்ந்தெடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்தார்.அதன் காரணமாக அழகான நடிகை என்பதோடு மட்டுமின்றி திறமையான நடிகை என்ற பெயரையும் பெற்றார் நதியா. மேலும் நதியா அணிந்த உடைகள், தோடுகள் அனைத்தும் 80களில் ட்ரெண்டிங்கில் இருந்தன. குறிப்பாக நதியா சேலை, நதியா தோடு என்றும் அவைகள் அழைக்கப்பட்டன.
ரஜினி உள்ளிட்டோருடன் நடித்த அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கி திருமணம் செய்துகொண்டார். பிறகு எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதனையடுத்து பிரேக் எடுத்த அவர் தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இந்நிலையில் அவர் தனது காதல் வாழ்க்கை குறித்து தனியார் யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில் பேசிய அவர், “சினிமாவ்க்குள் நான் வரும் முன்பே என்னுடைய கணவரை எனக்கு தெரியும். அவர் எனது வீட்டின் அருகில்தான் இருந்தார். முதலில் இருவரும் நண்பர்களாகத்தான் பழகினோம். பிறகு அது காதலாக மாறியது. எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நான் நடிக்க வந்தபோது அவர் வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்தார்.
அப்போதெல்லாம் ஃபோன் வசதி அவ்வளவாக இல்லை. அதனால் கடிதம்தான் எழுதுவார். அந்தக் கடிதம் ஒருமுறை அம்மாவிடம் சிக்கிவிட்டது. அதன் பிறகுதான் எங்களது காதல் விஷயம் வீட்டுக்கு தெரிந்தது. அப்போது எனது அப்பா என்னிடம் உனது காதலருக்கு வேலை கிடைக்கட்டும் என்று சொன்னார். எனவே அவருக்கு எப்போது வேலை கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருந்தேன். நான் வேறு மதம் அவர் வேறு மதம்.
அப்போது நான் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்ததால் என்னிடம் என் கணவர் உன்னால் குடும்பத்தை நடத்த முடியுமா என்றார். நான் முடியும் என்றேன். பிறகு அவருக்கு வேலை கிடைத்தது. உடனே நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். அந்த சமயத்தில் எங்களிடம் பணமெல்லாம் இல்லை. நாங்கள் இருவரும் வேறு மதம் என்பதால் எங்களுக்குள் ஒத்து வருமா என்று கவலைப்பட்டார்கள். எனது பெற்றோரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள்தான். எனவே எங்களுடைய காதலுக்கு பச்சைக்கொடி காண்பித்தனர்” என்றார்.





