ஒரு கலைஞன் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது படைப்புகள் காலம் முழுவதும் நிலைத்து நிற்க வேண்டும். அத்தகைய உன்னத படைப்புகளை தந்த ஒரு கலைஞன் எப்போதுமே தனது படைப்புகளின் மூலம் இந்த மண்ணில் வாழ்கிறார் என்று சொல்வதுண்டு. அதற்கு சிறந்த உதாரணம் தான் இயக்குனர் இமயம் பாரதிராஜா.
இயக்குனர் இமயம் பாரதிராஜா மொத்தம் 34 படங்களை அவரே டைரக்ட் செய்து இருக்கிறார். இதில் கல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஒரு கட்டத்துக்கு பிறகு அவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.
இயக்குனர் பாரதிராஜா இயக்கிய 34 திரைப்படங்களில் 6 படங்கள் தேசிய விருது பெற்றிருக்கின்றன. தமிழில் கார்த்திக் ராதா நடிப்பில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தின் தெலுங்கு மொழி படமான சீதாக்கோகா சிலகா என்ற படம் 1982ம் ஆண்டில் வெளியாகி சிறந்த தெலுங்கு திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றது.
அதன் பிறகு 1986ம் ஆண்டு வெளியான சிவாஜி கணேசன் ராதா நடித்த முதல் மரியாதை திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது. அதைத் தொடர்ந்து 1988ம் ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான வேதம் புதிது படம் சமூக பிரச்சனைகள் குறித்த சிறந்த திரைப்படமாக தேசிய விருது பெற்றது.
தொடர்ந்து 1995ம் ஆண்டில் குடும்ப நலம் சார்ந்த சிறந்த திரைப்படமாக பாரதிராஜா இயக்கிய கருத்தம்மா திரைப்படம் தேசிய விருது பெற்றது. இதில் பெண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் கொடுமையை பாரதிராஜா திரையில் பேசியிருந்தார். அதன் பிறகு 1996ம் ஆண்டில் பாரதிராஜா இயக்கிய அந்திமந்தாரை சிறந்த தமிழ் படம் தேசிய விருது பெற்றது.
அதன் பிறகு 2001ம் ஆண்டில் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை பாரதிராஜா இயக்கிய கடல் பூக்கள் படம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் முரளியுடன் பாரதிராஜாவின் மகன் மனோஜ்குமாரும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இப்படி பாரதிராஜா இயக்கிய 34 திரைப்படங்களில் 6 படங்கள் தேசிய விருது பெற்று தமிழ் சினிமாவுக்கு பெருமையை தேடித் தந்தது.





