நடிகை நயன்தாரா, நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது அந்த படத்தை இயக்கிய டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த படத்தை தயாரித்தது நடிகர் தனுஷ்தான். நயன் – விக்கி திருமண வீடியோ 2 ஆண்டுகளாகியும் வெளிவரவில்லை. காரணம், அந்த வீடியோவில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகள் இடம்பெற, தயாரிப்பாளர் தனுஷ் என்ஓசி தர வேண்டும். வரும் 18ம் தேதி இந்த வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த சூழ்நிலையில், நடிகை நயன்தாரா தனுஷ் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நடிகர் தனுஷ் தனது தந்தை மற்றும் அண்ணன் உதவியுடன் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். ஆனால் நான் தனி ஒரு பெண்ணாக எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் சினிமாவுக்குள் வந்தேன்.
நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள எனது திருமணம், வாழ்க்கையை ஆவணப்படுத்தும் Nayanthara Beyond the Fairy Tale படத்தை வெளியிட எனது ரசிகர்களும் எனது நல விரும்பிகளும் நானும் எதிர்பார்த்திருந்த நிலையில் உங்களின் தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கையால் நானும் எனது கணவரும் மட்டுமின்றி அந்த ஆவணப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம்.
காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்வான தருணங்கள் அடங்கிய இந்த ஆவணப்படத்தில் எனது வாழ்க்கையில் மகத்துவமான காதலை கண்டடைந்த நானும் ரவுடிதான் படம் இல்லாத வலி மிகவும் கொடுமையானது. நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் அந்த ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில் உங்களிடமிருந்து தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம்.
எங்களின் எல்லா போராட்டங்களும் பலனளிக்காத நிலையில் அந்த முடிவையே கைவிட்டுவிட்டு ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம். சமீபத்தில் வெளியான Nayanthara Beyond the Fairy Tale ட்ரெய்லரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 வினாடி வீடியோவிற்கு எதிராக நீங்கள் லீகல் நோட்டீஸ் அனுப்பியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதிலும் தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்டு, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்கப்பட்டிருப்பது மிகவும் வினோதமாக இருக்கிறது.
இப்படி ஒரு கீழ்த்தரமான இந்த செயல் ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவதைப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்து கொள்ள முடியாது என்பதை நானும் என் கணவரும் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறோம் என்று மேலும் பல விஷயங்களை குறிப்பிட்டு நயன்தாரா தனுஷை விமர்சித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.





