நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பிறகு முக்கியமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இருப்பினும் அவரால் ஒரு பெரிய வெற்றியை அண்மைக்காலமாக கொடுக்க முடியவில்லை. ஹிந்தியில் அவர் அறிமுகமான ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தை பெரிய அளவில் நம்பி இருந்தார்.
அந்தத் திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தாலும், அந்தக் கதாபாத்திரம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக தீபிகா படுகோன் வந்த காட்சிகள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதனால், இயக்குனர் அட்லியின் மீது நயன்தாரா அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் அவர் இணைந்து நடித்த இறைவன் திரைப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. பிறகு அன்னபூரணி எனும் தனது 75வது திரைப்படத்தில் நயன்தாரா நடித்தார். இதுவும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதற்கு பதிலாக சர்ச்சையை கிளப்பியது.
ஓ டி டி தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகும் போது அதில் பிராமண சமூகத்தினரை இழிவுபடுத்தி இருப்பதாக கூறி மகாராஷ்டிராவில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஓடிடி நிறுவனம் அன்னபூரணி படத்தை அதிலிருந்து நீக்கியது. இந்த விவகாரத்தில் நயன்தாராவும் மன்னிப்பு கேட்டார்.
தற்போது அவர் தயாரிப்பாளர் சசிகாந்த் முதன்முதலாக இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் டெஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் மாதவன் சித்தார்த் மீராஜாஸ்மின் காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் சூட்டிங் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இப்படியான சூழலில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்தியன் படத்தின் மூன்றாம் பாகத்தை நேரடியாக ஓடிடி யில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் டெஸ்ட் திரைப்படமும் இந்த வரிசையில் இணைந்திருக்கிறது.





