தமிழ் சினிமாவில் பல திரைப்படங்ளை தயாரித்தவர் தயாரிப்பாளர் கே ராஜன். பகாசுரன் கபடி கபடி வீட்டோட மாப்பிள்ளை உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்தும் இருக்கிறார். சினிமா குறித்தும் சினிமா நடிகர்கள் குறித்தும் விழா மேடைகளில் பகிரங்கமாக விமர்சித்து பேசுபவர் கே ராஜன். குறிப்பாக நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து கூட கே ராஜன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கே ராஜன் கூறியதாவது, தமிழ் சினிமா நடிகர்களில் தன்னிடம் உதவி என்று வந்தவர்களுக்கு எல்லாம் வாரி வழங்கியவர் என் எஸ் கிருஷ்ணன். நிறைய பேருக்கு அவர் உதவிகள் செய்திருக்கிறார். அவர் ஒரு கொலை வழக்கில் சிக்கி அவர் சொத்துகளை எல்லாம் இழந்து ஏழையாகி விட்டார்.
அப்போது ஒருவர், தனது மகள் திருமண அழைப்பிதழை வீட்டுக்கு வந்து நடிகர் என்எஸ் கிருஷ்ணனிடம் கொடுத்து அழைத்திருக்கிறார். அப்போது வெள்ளி டம்ளரில் பால் குடித்துக்கொண்டு இருந்த என் எஸ் கிருஷ்ணன், திருமண விழா என்று அழைப்பவருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமே என்று, கையில் பணம் இல்லாததால் தனது கையில் இருந்த வெள்ளி டம்ளரை அவருக்கு திருமண அன்பளிப்பாக கொடுத்து விட்டார்.
அதை பார்த்துக்கொண்டு இருந்த அவரது மனைவி டிஏ மதுரம் என்எஸ் கிருஷ்ணனை, ஏன் இப்படி கொடுத்தீங்க என்று கண்டித்தார். வலது கையில் வெள்ளி டம்ளரை கொடுக்காமல் இடது கையால் இப்படி கொடுக்கலாமா என்று அவர் திட்டியிருக்கிறார். அது ஒண்ணுமில்ல, இடது கையில் இருந்து வலது கைக்கு டம்ளரை கொண்டு வரும்போது புத்தி மாறிடும். கொடுக்க தோணாமல் போயிடும்.
அதனால்தான் கொடுக்க வேண்டும் என்று தோன்றியவுடன் உடனே அவருக்கு கொடுத்து விட்டேன் என்று மனைவியிடம் கூறி சமாதானம் செய்திருக்கிறார். அதே போல் ஒரு முறை இரவு நேரத்தில் நடிகர் என்எஸ்கே வீட்டுக்குள் ஒரு திருடன் புகுந்து விட்டான். ஆனால் பணம் நகைகளை அவர் திருடவில்லை. வீட்டில் இருந்த சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டு இருக்கிறான்.
அப்போது சமையல்கட்டில் பாத்திரம் உருளும் சப்தம் கேட்டு வந்து அந்த திருடனை வீட்டில் இருந்தவர்கள் பிடித்து விட்டனர். அப்போது என்எஸ் கிருஷ்ணன், ஏன் திருட வந்தே என்று அவனிடம் கேட்ட போது, பசியாக இருந்தது வேலை இல்லை அதான் திருட வந்தேன் என்று சொல்லி இருக்கிறான். வேலை கொடுத்தா செய்வியா என்று கேட்ட என்எஸ்கே, அவனிடம் தனது கார் சாவியை கொடுத்து இனிமேல் நீதான் என் கார் டிரைவர் என்று கூறியிருக்கிறார். திருட வந்தவனை தனது கார் டிரைவராக்கிய மகான் அவர். பிறகு தனது கஜானாவையே பார்த்துக்கொள்ளும் ஒரு பொறுப்பையே அந்த டிரைவரிடம் தந்திருக்கிறார் என தயாரிப்பாளர் கே ராஜன் ஒரு விழாவில் பேசியிருக்கிறார்.





