நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு படம் மூலம் அறிமுகமாகி 33 ஆண்டுகள் ஆன நிலையில், அவரது 69வது படம் ஜனநாயகன் வருகிற 9ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்போது தமிழக அரசியல் களத்தில் அவர் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்து நிற்கிறார். ஆளுங்கட்சி திமுகவுக்கு பெரிய தலைவலியாக மாறியிருக்கிறார்.
அதிமுக பாஜக உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் திமுகவை கடுமையாக விமர்சிக்க யோசிக்கும் நிலையில் நடிகர் விஜய் திமுக ஒரு தீயசக்தி என்ற கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது தமிழக மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் ஜனவரி 9ம் தேதியும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் மறுநாள் 10ம் தேதியும் வெளியாக உள்ளது. இது கடைசி நேரத்தில் செய்யப்பட்ட மாற்றம்தான். இல்லை என்றால் பராசக்தி படம் ஜனவரி 14ம் தேதி தான் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.
இப்போது விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரில் யாருடைய படத்துக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்ற கேள்வியும் குழப்பமும் ரசிகர்களிடையே நீடித்து வருகிறது. ஏனெனில் பொங்கல் பண்டிகை காலம் என்பதால் சிறப்பு காட்சிகளுடன் கூடுதல் காட்சிகளை திரையிட தியேட்டர்களில் அரசு அனுமதி வழங்கி விடும்.
இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு தியேட்டர்கள் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் லேட்டஸ்ட் தகவலை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, இப்போதைய நிலவரப்படி ஜனநாயகன் படத்திற்கு 650 தியேட்டர்களும் பராசக்தி படத்திற்கு 450 தியேட்டர்களும் ஒதுக்கி உள்ளோம். இது தவிர தி ராஜா சாப் என்ற பிரபாஸ் நடித்த படத்துக்கு 60 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்த ஒதுக்கீட்டில் சம்பந்தப்பட்ட படங்கள் திரைக்கு வரும் போது மாற்றங்கள் செய்யவும் அதிக வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறார். பராசக்தியை விட ஜனநாயகன் படத்திற்கு தமிழ்நாட்டில் 200 தியேட்டர்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டு இருப்பதை திருப்பூர் சுப்ரமணியன் உறுதிப்படுத்தி உள்ளார். அதே நேரத்தில் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது என்பதையும் அவர் முன்கூட்டியே எச்சரிக்கையாக தெரிவித்துள்ளார்.





