நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன், சிவாஜியின் மூத்த மகன் தயாரிப்பாளர் ராம்குமாரின் மகன் துஷ்யந்த் என்பவர், ஜெகஜாலக் கில்லாடி என்ற படத்தை தயாரிப்பதற்காக தனபாக்கியம் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ. 3.74 கோடி கடன் பெற்றிருக்கிறார். ஆனால் அந்த கடன் தொகை திருப்பி தராததால் வட்டியுடன் 9.39 கோடி ரூபாய் ஆன நிலையில் அவரிடம் பலமுறை கேட்டும் பணத்தை திருப்பித் தரவில்லை.
இதுகுறித்து தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிவாஜி கணேசன் வாழ்ந்து மறைந்த அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இது சிவாஜி கணேசன் ரசிகர்களை பெரிய அதிர்ச்சியில் தள்ளியது.
இந்நிலையில் அன்னை இல்லம் எனக்கு சொந்தமானது என்பதால் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சிவாஜியின் இளைய மகன் நடிகர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தன் அண்ணனுக்கும் இந்த வீட்டுக்கும் எந்த உரிமையும் இல்லை. இந்த வீடு எனக்கு மட்டுமே சொந்தமானது என்றும் கூறியிருந்தார்.
மேலும் உயர்நீதிமன்றம் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த வீட்டை நடிகர் சிவாஜி கணேசன் தனது இளைய மகன் நடிகர் பிரபுவுக்கு உயில் எழுதி வைத்துள்ளதாக கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் அன்னை இல்லம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் பிரபு குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகர் பிரபுவின் அண்ணன் ராம்குமார், அன்னை இல்லத்தின் மீது தனக்கு எந்த உரிமையும், பங்கும் இல்லை என்ன பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பல கோடி ரூபாய் மதிப்பிலான அன்னை இல்லம் வீட்டை ராம்குமார் தனது உரிமையை விட்டுக் கொடுத்தார் என்பதை நம்ப முடியவில்லை. இந்த ஜப்தி உத்தரவை ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அன்னை இல்லம் வீட்டை ஜட்ஜ் செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகர் பிரபு தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.





