நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி அறிவித்தார். அரசியல் இயக்க தலைவரான பிறகு நடிகர் விஜய் அப்போது நடித்து வந்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் மற்றும் விஜய் 69 ஆகிய 2 படங்களில் மட்டுமே நடிக்க இருப்பதாகவும், பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்தார்.
நடிகர் விஜய் அரசியல் இயக்கம் துவங்கியது அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. கட்சியில் உறுப்பினராக சேர விஜய் செயலியை அறிமுகப்படுத்திய நிலையில், 50 லட்சம் பேருக்கு மேல் அந்த செயலியை பயன்படுத்தியதால் அந்த செயலியே முடங்கிப் போகும் அளவுக்கு தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் விஜய். வருகிற செப்டம்பர் 5ம் தேதி அந்த படம் ரிலீஸாகிறது. இதற்கிடையே தனது கட்சிக் கொடியை நடிகர் விஜய் இன்று பனையூரில் உள்ள அவரது தலைமை நிலைய செயலகத்தில் அறிமுகம் செய்து வைத்து கட்சிக் கொடியை ஏற்றினார். மேலும், தவெக கட்சியின் பாடலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதற்கு முன்னதாக கட்சியினர் முன்னிலையில், தலைவர் விஜய் நெஞ்சில் கை வைத்தபடி உறுதிமொழி வாசிக்க, கட்சியினர் உறுதிமொழி ஏற்றனர். நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னை தமிழ் மொழியை காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக் காக்கின்ற பொறுப்புள்ள தனி மனிதராக செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதி பாதையில் பயணித்து என்றும் மக்கள் நலச் சேவகராக கடமை ஆற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்.
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைபிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன் என, விஜய் தலைமையில், அவரது கட்சியினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.





