தமிழ் சினிமாவில் ஏராளமான காமெடி நடிகர்கள் வந்து சென்று விட்டனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு கடும் பஞ்சம் நிலவி வருகிறது. ஏனெனில் காமெடி செய்து ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் நடிகர்கள் மிக விரைவில் சினிமாவில் ஹீரோவாகி விடுகின்றனர்.
அந்த வரிசையில் பல காமெடி நடிகர்கள் ஹீரோக்களாக மாறி நடித்து வருகின்றனர். ஆனால் இப்போதைக்கு யோகிபாபு ரெடின் கிங்ஸ்லி கருணாகரன் மொட்டை ராஜேந்திரன் போன்றவர்கள்தான் காமெடி செய்து வருகின்றனர். ஆனால் அந்த காலத்தில் துவங்கி இந்த காலம் வரை காமெடியில் கலக்கிய பல நடிகர்கள் உள்ளனர்.
குறிப்பாக நடிகர் சுருளிராஜன் காமெடி நடிப்பில் பெரிய அளவில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். அவரது குரலே வித்யாசமாக இருக்கும். அவரது டெலிவரி டயலாக் பெரிய அளவில் ரசிகர்களை ரசித்து சிரிக்க வைத்தது. குறிப்பாக ஜானி படத்தில் ரஜினியுடன் மோசடி போ்வழியாக நடித்திருப்பார். அதே போல் மாந்தோப்பு கிளியே என்ற படத்தில் மகா கஞ்சனாக நடித்து அசத்தியிருப்பார்.
எந்தவிதமான கேரக்டர் என்றாலும் சுருளிராஜன் நடிப்பு தனித்துவமாக தெரியும். ஒரு சில படங்களில் கணக்குப்பிள்ளை குமாஸ்தா போன்ற கேரக்டரில் நடித்த அவர், சில படங்களில் ஏமாற்று பேர்வழியாக நடித்திருப்பார். எந்த கேரக்டர் என்றாலும் அதில் ரசிகர்களை சிரிக்க வைத்துவிடும் வல்லமை மிக்கவர் நடிகர் சுருளிராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
கவிஞர் வாலி ஒரு நேர்காணலில் பேசுகையில், நானும் நாகேஷும் நாடகங்களில் வேலை பார்த்துட்டு இருந்த சமயங்களில் ஒருத்தன் வாய்ப்பு கேட்டு வந்தான். பார்க்க நல்லா துரு துருன்னு இருக்கானே என்று சொல்லி நாடகத்தில் ஒரு சின்ன கதாபாத்திரம் அவனுக்கு கொடுத்தோம் அதையே பிச்சு உதறிட்டான்.
என்ன இவன்? இப்படி நடிக்கிறான்? எப்படியும் பெரிய ஆளா வருவான் என்று அப்போதே நாகேஷ் சொன்னார். அது வேற யாரும் இல்லை. பிறகு சினிமாவில் வந்து காமெடியில் கலக்கின சுருளிராஜன் தான் அந்த நடிகர் என்று கவிஞர் வாலி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். நடிகர் சுருளிராஜன் காமெடி இன்றும் ரசிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.





