பொதுவாக பணம் அதிகமாக இருப்பவர்களுக்கு அதை எப்படி எல்லாம் செலவு செய்ய வேண்டும் எப்படி எல்லாம் அநாவசியாக செலவு செய்யக் கூடாது என்கிற அக்கறையும் விழிப்புணர்வும் இருக்காது. அதுவும் புதிதாக பணம் சம்பாதித்தவர்களுக்கு ஆடம்பர செலவு செய்வதில் அதிக ஆர்வமும் மகிழ்ச்சியும் இருக்கும். அதுவே அவர்களை விரைவில் சிக்கலில் சிக்க வைத்து விடும்.
சினிமா நடிகர்கள் நடிகைகள் பலர் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும்போது இப்படியும் சிலர் தவறான வழியில் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து பின்னாளில் பெரிய கடனாளியாக மாறியவர்கள் உண்டு. அதில் பழைய காமெடி நடிகர் சந்திரபாபுவை குறிப்பிட்டுச் சொல்வார்கள்.
ஆனால் இன்றைய நடிகர்களில் பலர், சினிமாவில் சம்பாதித்த பணத்தை ஓட்டல்கள், துணிக்கடைகள் அபார்ட்மெண்டுகள் காம்ப்ளக்ஸ் திருமண மண்டபங்கள் என கட்டி வைத்து அதன்மூலமும் கணிசமான வருமானம் பார்க்கின்றனர். சினிமாவில் நடிக்காத போதும் அவர்களுக்கு மாதந்தோறும் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் இதன்மூலம் வருமானம் வந்து விடும்.
எனினும் சில நட்சத்திர நடிகைகள் தங்களது ஆடம்பரத்தை வெளிப்படுத்த அவர்கள் கையில் வைத்திருக்கும் பேக் அணியும் கண் கண்ணாடி அணியும் வாட்ச் ஆடம்பர நகைகள் என பல லட்சம் மதிப்பிலான அணிந்துக்கொண்டு விமான நிலையங்களுக்கு வருகின்றனர். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து சமீபத்தில் நடிகை சமீரா ரெட்டி நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, சக நடிகைகள் விமான நிலையத்துக்கு வரும்போது விலை உயர்ந்த பைகளை வைத்திருப்பதை பார்த்து நானும் அதே போல் 1.70 லட்சம் 2.50 லட்சம் ரூபாய் 4 லட்சம் ரூபாய் என பைகள் ஜாக்கெட்டுகளை வாங்கினேன்.
மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காக இதை எல்லாம் செய்தேன். அந்த பணத்தை தங்கத்தில் முதலீடு செய்து இருந்தால் இன்று எனக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கும் என்று நடிகை சமீரா ரெட்டி கூறி இருக்கிறார். அதாவது பைகள் ஜாக்கெட்டுகளை வாங்க லட்சக்கணக்கான பணத்தை செலவழித்ததற்கு பதிலாக தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் பெரிய லாபம் கிடைத்திருக்கும் என்று சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்.





