தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர பாடல் ஆசிரியராக இருப்பவர் கவிஞர் வைரமுத்து. பல ஆயிரம் ஹிட் பாடல்களை தமிழ் சினிமாவுக்கு தந்தவர். கருவாச்சி காவியம் கள்ளிக்காட்டு இதிகாசம் மூன்றாம் உலகப்போர் என இலக்கிய தரம் வாய்ந்த மிகச் சிறந்த நூல்களை, கவிதை புத்தகங்களை எழுதியவர். வைரமுத்து பலமுறை சிறந்த பாடல் ஆசிரியர் என தேசிய விருது பெற்றவர்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, இது என் மீது ஒரு பழி உண்டு. பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்யமாட்டேன் என்று. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. திருத்தத்திற்கு ஒரு கருத்தமைதி வேண்டும். இருந்தால் அதற்கு நான் உடனே உடன்படுவேன். மாற்றியும் கொடுப்பேன்.
கொடுத்திருக்கிறேன்; புன்னகை மன்னன் படத்தில் வான்மேகம் பூப்பூவாய் தூவும் என்றொரு பாட்டு. மழையில் நனையும் ஒரு மான்குட்டி தன் கவிதையால் மழையை குளிப்பாட்டும் பாட்டு. மழைத்துளி தெறித்தது, எனக்குள்ளே குளித்தது, நினைத்தது பலித்தது, உயிர்த்தலம் சிரித்தது என்று எழுதியிருந்தேன்.
உயிர்த்தலம் என்பதை மட்டும் மாற்றி கொடுங்கள் என்றார் இசையமைப்பாளர். ஏன் என்றேன். நீங்கள் எழுதிய பொருளில் புரிந்து கொள்ளாமல் அதை பெண்ணுறுப்போடு சம்பந்தப்படுத்தி பிரச்னை செய்வார்கள் என்றார். சிந்தித்தபோது சரி என்று பட்டது. உடனே நான், நினைத்தது பலித்தது குடைக்கம்பி துளிர்த்தது என்று மாற்றிக் கொடுத்தேன். இதில் நியாயம் இருக்கிறது.
இன்னொரு படம் மனிதன். அதில் வானத்தைப் பார்த்தேன் பூமியை பார்த்தேன் என்றொரு பாடல். குரங்கிலிருந்து பிறந்தானா குரங்கை மனிதன் பெற்றானா யாரை கேள்வி கேட்பது, டார்வின் இல்லையே என்று எழுதி இருந்தேன். இயக்குனர் எஸ்பி முத்துராமனின் உதவியாளர் லட்சுமி நாராயணன், என் காதோடு வந்து, டார்வின் என்பதை மட்டும் மாற்றுங்கள். அது எல்லோருக்கும் புரியாது என்றார். நான் புன்னகையோடு சொன்னேன். தெரிந்ததை மட்டும் சொல்வதெல்லாம் பாட்டு; தெரியாததை சொல்லிக் கொடுப்பதும் பாட்டு என்று மாற்ற மறுத்துவிட்டேன்.
எஸ்பி முத்துராமனிடம் சென்று நான் சொன்னதை சொல்லி இருக்கிறார். அவரும் இதற்கு மேல் வற்புறுத்த வேண்டாம் என்று வருத்தத்தோடு விட்டுவிட்டார். டார்வின் பேசப்பட்டது. இப்படி நியாயமான பொழுதுகளில் மாற்ற மறுத்து இருக்கிறேன். பாட்டு வரியின் திருத்தத்தை பொருளமைதியே தீர்மானிக்கிறது. நான் அல்ல, ஆனால் பழி என்மீதே வருகிறது, என்ன செய்ய என்று அந்த பதிவில் வைரமுத்து குறிப்பிட்டு இருக்கிறார்.





