தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் கஸ்தூரி ராஜா. பல வெற்றிப் படங்களை 1980 90களில் கொடுத்திருக்கிறார். என் ராசாவின் மனசிலே நாட்டுப்புற பாட்டு சோலையம்மா வீரத் தாலாட்டு தாய் மனசு எட்டுப்பட்டி ராசா வீரம் வௌஞ்ச மண்ணு கும்மிப்பாட்டு கரிசக்காட்டு பூவே என் ஆச ராசாவே போன்ற பல வெற்றிப் படங்களை தந்தவர்.
இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன்தான் இயக்குனர் செல்வராகவன். இப்போது பல படங்களில் நடித்து வருகிறார். இளைய மகன் தனுஷ் நடிகராக தயாரிப்பாளராக இயக்குனராக உள்ளார். இப்போது கஸ்தூரி ராஜாவின் மகளின் மகன் பவிஷ் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். தனுஷ் இயக்கிய நீக் படத்தின் நாயகனாக அறிமுகமாகி உள்ளார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியதாவது, காதல் வரும் பருவம் என்ற ஒரு படத்தில் நான் இசையமைப்பாளராக என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அப்போது பாடல் எழுதுவதற்காக கவிஞர் வைரமுத்து என் அலுவலகத்துக்கு வந்தார்.
அப்போது பாடல் எழுதுவதற்காக டியூனுக்கு டம்மி வார்த்தைகள் போட்டு கொடுப்பது வழக்கம். அப்படி எழுதி தந்த பாடல்களை வாங்கிக் கொண்டு போனார். பாடல்கள் எல்லாம் உலக தரத்தில் இருக்கின்றன ஐயா என்று சொல்லிக்கொண்டு போய்விட்டார்.
அடுத்த நாளே வைரமுத்து அலுவலகத்தில் இருந்து பாடல்கள் எல்லாம் வந்துவிட்டன. அதை ஓபன் செய்து பார்த்தால் நான் எழுதிய பாடல்களையே அந்த காப்பியையே திருப்பி கொடுத்து அனுப்பி இருக்கிறார். நான் அவருக்கு போன் செய்து, என்ன சார் அப்படியே கொடுத்துட்டீங்களே என்று கேட்டேன்.
அதுவே நன்றாக தானே இருக்கிறது கஸ்தூரி ராஜா? அதை ஏன் சிதைக்க வேண்டும் என்று சொல்லி விட்டார். அதன்பிறகு அவ்வளவு பெரிய கலைஞர்களுடன் நாம ஒர்க் பண்ண முடியாது என்று அதை விட்டுவிட்டேன் என்று இயக்குனர் கஸ்தூரி ராஜா அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





