தமிழ் சினிமாவில் சிறந்த பாடல் ஆசிரியராக பலமுறை தேசிய விருது வென்றவர் கவிஞர் வைரமுத்து. சமீபத்தில் இலக்கியத்துக்கான உயரிய விருதான ஞானபீடம் விருதும் கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டது. சினிமா கவிஞராக மட்டுமின்றி ஏராளமான கவிதை இலக்கிய படைப்பு நூல்களையும் கவிஞர் வைரமுத்து தந்திருக்கிறார்.
நேற்று மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு அப்போது பரிசு வழங்கினார்.
அதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது, பணக்காரர்கள் படிப்பதற்கு செல்ல பல்வேறு இடங்கள் இருக்கிறது. ஆனால் ஏழை எளிய மாணவர்கள் படிப்பதற்கு மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளை நாடுகிறார்கள். ஆனால் இந்த ஆண்டு வந்துள்ள செய்திகள் மகிழ்ச்சியாக இல்லை.
தற்போதைய புள்ளி விவரங்களை படி தமிழகத்தில் அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை சரிந்து இருக்கிறது. அது சரியக் கூடாது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.
அப்துல் கலாம் தமிழ் வழியில் கல்வி பயின்றவர். தமிழில் என்ன இருக்கிறது என கேட்கிறார்கள். தமிழில் ஒரு ஜனாதிபதியே இருக்கிறார். தமிழை குறைத்து சொல்லக் கூடிய ஒரு சமூகம் இருந்தால் அந்த சமூகம் அழிந்தே போகட்டும். தாய்மொழி கண் போன்றது. பிற மொழியானது கண்ணுக்கு அணியும் கண்ணாடி போன்றது.
அதனால் தாய் மொழியை கற்றபிறகு மற்ற மொழிகளை கற்க வேண்டும். இந்தியையும் கற்க வேண்டும் என்றால் கற்றுக் கொள்ளுங்கள். காலத்தின் தேவை கருதி இந்தி மொழியையும் கற்கலாம் என்று அந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து தமிழ் மொழி குறித்து ஆவேசமாக பேசி இருக்கிறார்.





