பாரதிராஜா இயக்கிய படங்களில் இளையராஜா இசையில் கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்கள் ஒலித்தால் இன்றும் இசை ரசிகர்களின் செவிகளில் தேனாக இனிக்கின்றன. ஆனால் இளையராஜா – வைரமுத்துவும் இணைந்த இசை கவிதை கூட்டணி 6 ஆண்டுகள் மட்டுமே நீடித்த நிலையில் அந்த 6 ஆண்டுகளில் பூத்த மலர்கள்தான் 36 ஆண்டுகள் ஆகியும் இன்றும் வாடாமல் இசையாக மணக்கின்றன.
இளையராஜா வைரமுத்து நட்பில் விரிசல் ஏற்பட்ட பிறகு பாரதிராஜா இயக்கிய பல படங்களுக்கு ஏஆர் ரகுமான்தான் இசையமைத்தார். அவரது இசையில் கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்கள் அனைத்துமே என்றென்றும் ரசிக்கிற இனிக்கிற பாடல்களாக தமிழ் சினிமா ரசிகர்களை மயங்க வைத்திருக்கின்றன.
திரையுலக நண்பராக பாரதிராஜா வைரமுத்து நட்பு பல ஆண்டுகளாக நீடித்து வரும் சூழலில், இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் குமார் நேற்று மாரடைப்பால் காலமான நிலையில், அவரது உடலுக்கு திரையுலக நடிகர் நடிகைகள் இயக்குனர் என பலரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். கவிஞர் வைரமுத்துவும் தனது அஞ்சலியை நேரில் செலுத்தினார்.
இந்நிலையில் அவர் தனது வலைதள பக்கத்தில் மறைந்த நடிகர் மனோஜ்குமார் பாரதிராஜாவுக்கு எழுதிய கண்ணீர் கவிதையில் கூறியிருப்பதாவது, மகனே மனோஜ் மறைந்து விட்டாயா, பாரதி ராஜாவின் பாதி உயிரே பாதி பருவத்தில் பறந்து விட்டாயா, சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடாவாடா என்று உனக்கு அறிமுகப் பாடல் எழுதினேனே, சிங்கம் இருக்க பிள்ளை நீ போய்விட்டாயே, உன் தந்தையை எப்படி நான் தேற்றுவேன்?
எனக்கு கடன் செய்ய கடமைப்பட்டவனே, உனக்கு நான் கடன் செய்வது காலத்தின் கொடுமையடா, என்று தகப்பனை தவிக்கவிட்டு தங்கமே இறந்து விட்டாயா, உன் கலை கனவுகள் கலைந்து விட்டனவா, முதுமை – மரணம் இரண்டும் காலத்தின் கட்டாயம்தான்.
ஆனால் முதுமை வயது பார்த்து வருகிறது; ஆனால் மரணம் வயது பார்த்து வருவதில்லை. சாவுக்கு கண்ணில்லை. எங்கள் உறக்கத்தை கெடுத்து விட்டவனே, உன் உயிரேனும் அமைதியில் உறங்கட்டும் என்று கவிஞர் வைரமுத்து, அந்த கண்ணீர் கவிதையில் தன் உணர்வுகளை உருக்கமான கவிதையாக பதிவிட்டுள்ளார்.





