- Advertisement -
Homeபொழுதுபோக்குதியேட்டர்கள் முன் போராட்டங்கள் நடத்தக் கூடாது; கர்நாடகாவில் கன்னட அமைப்புகளுக்கு போலீசார் விடுத்த திடீர் எச்சரிக்கை!

தியேட்டர்கள் முன் போராட்டங்கள் நடத்தக் கூடாது; கர்நாடகாவில் கன்னட அமைப்புகளுக்கு போலீசார் விடுத்த திடீர் எச்சரிக்கை!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடித்த தக்லைஃப் படம் கடந்த 5ம் தேதி கர்நாடக மாநிலம் தவிர்த்து உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என்று கமல்ஹாசன் பேசிய சர்ச்சையால் தக்லைஃப் படம் கர்நாடகா மாநிலத்தில் ரிலீஸ் ஆகவில்லை. நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராகவும் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் கன்னட திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது.

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டதால், கடந்த 5ம் தேதி தக்லைஃப் படம் கர்நாடகா மாநிலத்தில் வெளியாகவில்லை. இதனை எதிர்த்து கர்நாடகத்தைச் சேர்ந்த மகேஷ் ரெட்டி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கர்நாடகத்தில் தக்லைஃப் படத்தை திரையிட அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -

அதனால் கர்நாடகத்தில் தக்லைஃப் படத்தை திரையிடும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதற்கு முன்பு கமல்ஹாசன் நடித்த தக்லைஃப் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு தீ வைப்போம், கல் வீசி தாக்குதல் நடத்துவோம் என்று கன்னட அமைப்புகளை சேர்ந்த சிலர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். தற்போது சுப்ரீம் கோர்ட் தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதி வழங்கி இருப்பதால், அந்த படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கர்நாடகா போலீசார் முன்வந்துள்ளனர்.

குறிப்பாக பெங்களூருவில் தக்லைஃப் படம் திரையிடப்பட்டால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். இதற்காக கன்னட அமைப்புகளின் தலைவர்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். முதல் கட்டமாக கன்னட ரக்சன வேதிகே அமைப்பின் தலைவரான பிரவீன் ஷெட்டிக்கு எச்சரிக்கை நோட்டீஸ் போலீசார் கொடுத்துள்ளனர்.

- Advertisement -

அதில் பெங்களூருவில் தக்லைஃப் படம் திரையிடப்படும் தியேட்டர்கள் முன்பாக போராட்டம் நடத்த அனுமதி இல்லை. பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி உள்ளது. சட்டத்திற்கு எதிராக வேறு எங்கும் போராட்டம் நடத்த அனுமதி இல்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இது போன்ற நடவடிக்கைகள் தேவையானது என்றும் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் பிரவீன் ஷெட்டியை சந்தித்து போலீசார் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தபோது, அதை வாங்க அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து பெங்களூருவில் உள்ள அவரது வீட்டின் முன்பாக போலீசார் நோட்டீசை ஒட்டி வைத்துள்ளனர். இதற்கு பிரவீன் ஷெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் கரவே நாராயண கவுடா உட்பட கன்னட அமைப்புகளின் தலைவர்கள், பிரமுகர்களுக்கும் போலீசார் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்