தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். புரட்சிக் கலைஞர், கேப்டன் என அழைக்கப்பட்டவர். சினிமாவில் சாதனைகள் பல செய்த கேப்டன், 2005ம் ஆண்டில் தேமுதிக என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார். தமிழக மக்களிடம் அமோக ஆதரவை பெற்றார்.
கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக கட்சி, அதிமுக சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக விஜயகாந்த் அமர்ந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக நோய்வாய்ப்பட்ட கேப்டன், அடுத்த 7 ஆண்டுகள் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி மறைந்து விட்டார்.
கேப்டனின் மறைவுக்கு பிறகு அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன் விஜயபிரபாகரன் தம்பி சுதீஷ் ஆகியோர் தேமுதிக கட்சியை நடத்தி வருகின்றனர். தேமுதிகவின் பொதுச் செயலாளராக உள்ள பிரேமலதா கட்டுப்பாட்டில் கட்சியின் முழு கட்டுப்பாடும் இருந்து வருகிறது. விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.
விஜயகாந்த் மூலம் செந்தூரப்பாண்டி படத்தில் நடிகர் விஜய் மிகப்பெரிய அடையாளம் பெற்றவர். வளரும் நடிகராக இருந்த விஜய்க்கு, தன் தம்பியான நடிக்க வைத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய அடையாளத்தை பெற்றுத் தந்தவர் கேப்டன்தான் என்றால் அது மிகையல்ல. ஆனால் இப்போது தவெக கட்சியின் தலைவராக விஜய் அரசியல் களத்தில் இருந்து வருகிறார்.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது, விஜய் எங்க வீட்டுப் பையன். அவரை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தவர் கேப்டன் தான். ஆனால் சினிமா வேறு, அரசியல் வேறு. 4க்கு 4 அறையில் இருந்துக்கொண்டு அரசியல் செய்யாமல் விஜய் பனையூரை விட்டு வெளியே வர வேண்டும்.
மக்களை அவர்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று நேரில் விஜய் சந்தித்து பேச வேண்டும். குறிப்பாக பத்திரிகையாளர்களை விஜய் சந்தித்து பேச வேண்டும். அவர்களது கேள்விகளுக்கு சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டும். மக்களின் பிரச்னைகளை பற்றி பேச வேண்டும். அப்போதுதான் அரசியலில் நிலைத்து நிற்க முடியும். இதை நான் ஒருமுறை விஜயிடமே சொல்லி இருக்கிறேன், என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியிருக்கிறார்.





