விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். The Greatest of All Time திரைப்படத்தின் சுருக்கமே கோட் என்று அழைக்கப்படுகிறது. ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்
இதில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. பிரசாந்த் பிரபுதேவா மைக் மோகன் உள்ளிட்டோர் நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் தோன்றுகிறார்கள். இதுபோக லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, விடிவி கணேஷ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அங்குள்ள மைதானத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அடுத்து ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்த வெங்கட் பிரபு திட்டமிட்டு இருக்கிறார். அதனுடன் ஷூட்டிங் முடிவடைவதாக கூறப்படுகிறது.
இருப்பினும் வி எப் எக்ஸ் பணிகள் பாதிக்கு மேல் இருப்பதாகவும், இது முடிவடையவே கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் கடைசியாக நடிக்கும் திரைப்படம் குறித்த பேச்சு இப்போது வரை நீடிக்கிறது.
அரசியலுக்கு செல்லும் விஜய், தனது 69 ஆவது திரைப்படத்துடன் திரையுலக பயணத்தை விட்டு விலகுவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவரை இயக்கப் போவது யார் என்று எதிர்பார்ப்பு எழுதி இருக்கிறது. இந்த ரேஸில் முதலில் அட்லி தான் முந்த இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவர், அடுத்ததாக அல்லு அர்ஜுன் இணைந்து பணிபுரிய இருப்பதால் விஜய்யுடன் இணைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து வெற்றிமாறன் இந்த திரைப்படத்தை இயக்குவதாக கூறப்பட்டது. மேலும் தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் இதனை எடுக்க போவதாகவும் தகவல் வெளியானது. இப்படியான சூழலில் இந்த ரேசில் மீண்டும் எச் வினோத்தின் பேச்சு அடிபடுகிறது. அவர் கூறிய கதை விஜய்க்கு பிடித்திருப்பதால் இவரே கடைசி திரைப்படத்தை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வினோத் பேசிய வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பேசிய வினோத், சதுரங்க படத்திற்கு பிறகு தான் இதுவரைக்கும் எந்த ஒரு நடிகருக்கும் முழு கதையை கூறியதில்லை என்றும், விஜய்யிடம் மட்டும் தான் கதையை வாசித்துக் காட்டியதாகவும் தெரிவித்திருக்கிறார்.





