தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். அவர் கடைசியாக நடித்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்துக்கு சம்பளமாக 200 கோடி ரூபாய் பெற்றார். இப்போது அவர் அடுத்ததாக நடிக்க உள்ள அவரது 69 வது படத்தில் அவரது சம்பளம் 275 கோடி என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படி விஜய்க்கு சம்பளத்தை கொட்டி கொடுத்தாலும் அதையும் தாண்டி அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கிய விஜய், கடந்த மாதத்தில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார். கட்சி பாடலையும் வெளியிட்டார். தொடர்ந்து வருகிற 23ம் தேதி கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடத்துவதாக இருந்த நிலையில், இப்போது அது அக்டோபர் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு சென்று விட்டதால், சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக கூறி இருக்கிறார். அதாவது இப்போது விஜய் நடிக்க உள்ள 69 வது படம் தான் தனது கடைசி படம் என்றும் திட்டவட்டமாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். விஜய் அரசியலுக்கு செல்வது மகிழ்ச்சி அளித்தாலும், அவர் சினிமாவை விட்டு விலகுவது மிகப்பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறை சார்ந்த பலரும் இதே கருத்தை கூறி வருகின்றனர். அரசியலுக்கு சென்றாலும் அவ்வப்போது ஓரிரு படங்களில் அவர் நடித்தால், ரசிகர்களுக்கும் திருப்தியாக இருக்கும். திரைத்துறை சார்ந்தவர்களுக்கும் அது வணிக ரீதியாக நல்ல வருமானத்தை கொடுக்கும் என்றும் கூறி வருகின்றனர்.
ஆனால் அதே நேரத்தில் நடிகர் விஜய் குறித்த மாற்றுக் கருத்துக்களும் பரவி வருகின்றன. நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்தில் மட்டுமின்றி, பொதுவாகவே யாரிடமும் பேச மாட்டார். அவரது மேனேஜர் மூலமாக தான் எந்த தகவலும் வரும். இப்படித்தான் அவரது சினிமா பயணம் இருந்து வருகிறது. அவர் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்ற அறிவித்தது பலருக்கும் ஏமாற்றத்தை தந்தாலும், சிலர் அதை சாதாரணமாகவே பார்க்கின்றனர்.
பிரபல சினிமா தயாரிப்பாளர் கே ராஜன் இதுகுறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். நடிகர் விஜய் சினிமாவை விட்டு போகக்கூடாது, அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என இயக்குனர் சங்கமோ, தயாரிப்பாளர் சங்கமோ ஏன் கோரிக்கை வைக்கவில்லை என அவரிடம் கேட்ட போது, அதற்கு பதில் சொன்ன கே ராஜன், விஜய் யாரை மதிச்சாரு, இவரை மத்தவங்க மதிக்கறதுக்கு? அவர் இயக்குனர் சங்கத்தையோ, தயாரிப்பாளர் சங்கத்தையோ, பெப்சி தொழிலாளர்களையோ மதித்தது கிடையாது. வருவாரு, நடிப்பாரு, போவாரு. அவ்வளவுதான் என்று கோபமாக பேசி இருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.





