நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்போது இடியாப்ப சிக்கலில் மாட்டித் தவித்துக்கொண்டு இருக்கிறது. இப்போது இளையராஜா கொளுத்திப் போட்ட விஷயம் மேலும் அந்த நிறுவனத்துக்கு பெரிய நெருக்கடியை தந்துள்ளது. நெட்பிளிக்ஸ் திருப்பிக் கேட்ட தொகையால் அந்த நிறுவனம் ஆடிப்போயுள்ளது.
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா இசையில் உருவான பழைய பாடல்களை பயன்படுத்தியதால், ரூ. 5 கோடி இழப்பீடு கேட்டு அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். உரிமம் பெற்ற பிறகே பாடல்களை பயன்படுத்தியதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டில் பதில் அளித்தது. இந்த விவகாரத்தில் ஒரு கட்டத்தில் அந்த 3 பாடல்களை படத்தில் இருந்து நீக்க கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்த குட் பேட் அக்லி படத்தில், கோர்ட் விதித்த தடை உத்தரவுக்கு பிறகும் இளையராஜா பாடல்கள் தொடர்ந்து இடம்பெற்றன. இதையடுத்து கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாக இளையராஜா தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பியதால் நெருக்கடி அதிகரித்தது.
இந்த சூழலில் நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் தளத்தில் இருந்த குட் பேட் அக்லி படத்தையே நீக்கி விட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நயன்தாரா நடித்த அன்னபூரணி படத்துக்கும் இதே போல் ஒரு பிரச்னை வந்ததால் அந்த படத்தையே நெட்பிளிக்ஸ் நிறுவனம் நீக்கி விட்டது. இப்போது குட் பேட் அக்லி படமும் நீக்கப்பட்டு விட்டது.
குட் பேட் அக்லி படத்தை தயாரித்த வகையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 70 கோடி வரை ஏற்கனவே நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் குட் பேட் அக்லி படத்தை நீக்கிய நிலையில், தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து விற்ற தொகையில் மீதியை கேட்டுள்ளது. அதாவது குட் பேட் அக்லி படத்தை ரூ. 110 கோடி கொடுத்து நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது.
இப்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடம் ரூ. 80 கோடியை திருப்பித் தருமாறு நெட்பிளிக்ஸ் நிறுவனம் கேட்டுள்ளது. ஏற்கனவே ரூ. 70 கோடி நஷ்டமடைந்த நிலையில் இப்போது மீண்டும் ரூ. 80 கோடி தர வேண்டிய சூழலில் தயாரிப்பு நிறுவனம் கதிகலங்கிப் போயுள்ளது. இந்த நஷ்டத்தை ஈடுகட்டப் போவது எப்படி எனத் தெரியாமல் தயாரிப்பு நிறுவனம் தடுமாறுகிறது. எல்லாம் இளையராஜாவால் வந்த சிக்கல் என்று படக்குழுவினர் புலம்புகின்றனர்.





