நடிகர் கமல்ஹாசன் தீவிர வாசிப்பாளர். இலக்கிய ஆர்வம் மிக்கவர். கவிஞர்கள் வைரமுத்து புவியரசு வாலி போன்றவர்களுடன் நெருக்கமான நட்பு கொண்டவர். குறிப்பாக பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் கு ஞானசம்பந்தம் கமலின் நெருக்கமான நண்பர்களில் ஒருவர். விருமாண்டி படத்தில் அவரை நடிக்கவும் வைத்திருந்தார். அதன்பிறகு கு ஞானசம்பந்தம் பல படங்களில் நடித்து விட்டார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பட்டிமன்ற நடுவர் மற்றும் நடிகர் பேராசிரியர் கு ஞானசம்பந்தன் கூறியதாவது, ஒரு தடவை கமல்ஹாசன் எனக்கு போன் பண்ணினார். இன்னொரு நண்பரோட கைப்பேசி எண்ணை அவருக்கு அனுப்பச் சொன்னார். எனக்கு அப்படி அதுவரை அனுப்பி பழக்கமே இல்லை. எப்படி அனுப்புவது என்றும் தெரியாது. போன் நெம்பர் கேட்டால் பார்த்து சொல்லி விடுவதுதான் வழக்கம்.
அதற்கு கமலிடம் நான், போனிலேயே நெம்பர் சொல்லி விடுகிறேனே, எனக்கு அப்படி நெம்பரை அனுப்பத் தெரியாது என்று கெஞ்சினேன். அதற்கு அவர், ஞானசம்பந்தம், இன்னும் தமிழ் வாத்தியாராவே இருக்காதீங்க. இப்ப என்ன பண்றீங்க, எனக்கு நம்பரை எனக்கு நீங்களே அனுப்புறீங்க என்று சொல்லிவிட்டு போன் இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
அப்புறம் நான் வேற வழி இல்லாமல் அந்தப் புது முயற்சியில் இறங்குனேன். அவரைத் தவிர ஒரு டஜன் பேருக்கு அவர் கேட்ட நம்பரை அனுப்பிட்டேன். ஆனால் அவருக்குப் போகலை. எப்படியோ ஒரு வெற்றுச்செய்தி (எம்டி மெசேஜ்) மட்டும் அவருக்கு போயிருக்கு. உடனே இணைப்புல வந்து, ஆங். ஏதோ முயற்சி நடக்குதுன்னு தெரியுது. தொடரட்டும்ன்னு சொல்லிட்டு மறுபடியும் வெச்சிட்டார்.
அப்புறம் வேர்க்க விறுவிறுக்க ஒரு வழியாக அவர் கேட்ட அந்த நம்பரை அவருக்கு அனுப்பிட்டேன். சில சமயம் நம்ம வாத்தியாரைப் பார்த்து நாமே யோசிப்போம் இல்லியா? அய்யய்ய, இவர்கிட்டையா நாம படிச்சோம்? என்று. அப்படியிருக்கக் கூடாது. சில வாத்தியாருங்க அவங்க சப்ஜெக்ட்டுல மன்னாதி மன்னனா இருந்தாலும், நாம அஞ்சாம் கிளாஸ் படிச்சப்ப எப்படியிருந்தாரோ அப்படியே இருப்பாங்க.
என்னைப் பொருத்தவரைக்கும் வாத்தியார் என்பவர் ஏணி மாதிரி அதே இடத்துல இருக்கக்கூடாது. லிப்ட் மாதிரி கூடவே வரணும். முடிந்தால் மாணவர்களையும் விஞ்சி நிற்க வேண்டும். அப்போதுதான் மரியாதைக்குரியவர்களாக இருப்போம். வாத்தியார் என்றில்லை, எல்லாத்துறைகளுக்கும் இது பொருந்தும் என்று கமலுடன் தனக்கு நேர்ந்த அனுபவத்தை உதாரணமாக காட்டி பேராசிரியர் கு ஞானசம்பந்தன் பேசியிருக்கிறார்.





