தமிழ் சினிமாவை பொருத்த வரை ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத்குமார் ஆகிய 4 நட்சத்திர நடிகர்களும் டாப் லெவல் நடிகர்களாக உள்ளனர். இவர்கள் நடித்த படங்கள் தோல்வியடைந்தாலும் வசூல் ரீதியாக, வணிக ரீதியாக தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் வராமல், போட்ட பட்ஜெட்டை திரும்ப எடுத்து விடுவர் என்று கூறப்படுகிறது.
ஆனால் தமிழ் சினிமாவில் இதுவரை 1000 கோடி ரூபாய் வசூலை எந்த படமும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, நடப்பாண்டில் வெளியான தமிழ் படங்களில் 8 படங்கள் மட்டுமே 100 கோடி வசூலை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் தி கோட் 445 கோடி ரூபாய், அமரன் 325 கோடி ரூபாய், வேட்டையன் 265 கோடி ரூபாய் வசூலை எட்டியிருக்கிறது.
ஆனால் இந்தியில் தங்கல், பதான், ஜவான் போன்ற படங்கள் 1000 கோடி ரூபாய் வசூலை வெகு எளிதாக கடந்திருக்கின்றன. தெலுங்கில் வெளியான பாகுபலி, ஆர்ஆர்ஆர், கல்கி 2898ஏடி, கன்னடத்தில் வெளியான கேஜிஎப் 2 போன்ற படங்களும் 1000 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை புரிந்துள்ளன. அடுத்தடுத்து வர உள்ள காந்தாரா போன்ற படங்களும் அந்த சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 5ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் புஷ்பா 2 படம், ரிலீஸான 7 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை புரிந்தது. இந்த படத்தின் நாயகன் அல்லு அர்ஜூன், தியேட்டரில் நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த படத்தின் நீளம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் என்ற நிலையில், இவ்வளவு நீளமான படத்தை அமர்ந்து பார்க்க ரசிகர்களுக்கு பொறுமை இருக்குமா என பலரும் விமர்சித்த நிலையில், ஒரே டிக்கெட்டில் 2 படங்கள் பார்த்த திருப்தி கிடைத்தது என்ற ரசிகர்களின் விமர்சனம் பலரையும் வியப்படைய வைத்தது. படத்தின் விறுவிறுப்புக்கு முன்னால் நேரம் ரசிகர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதை தெளிவுபடுத்தியது.
இந்நிலையில் புஷ்பா 2 படம் வெளியாகி 11 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் இந்த படம் 1409 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இன்னும் சில தினங்களில் ரூ. 1500 கோடி வசூலை எட்டிவிடும் என்ற நிலையில், 2000 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமை புஷ்பா 2 படத்துக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், இனிமேல் வசூல் மன்னன் என்று தமிழ் பட ஹீரோக்களை சொல்லாதீர்கள் என்று ரசிகர்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.





