கேப்டன் விஜயகாந்துடன் பல படங்களில் வில்லனாக நடித்தவர் நடிகர் ராதாரவி. விஜயகாந்துக்கு மிக நெருக்கமான நண்பர்களில் ராதாரவியும் மிக முக்கியமானவர். சினிமாவில் விஜயகாந்த் நடிக்க துவங்கிய காலகட்டத்தில் விஜயகாந்த், ராதாரவி நிறைய படங்களில் சேர்ந்து நடித்தனர்.
நடிகர் ராதாரவி துவக்கத்தில் திமுக ஆதரவாளராக இருந்தார். ஆனால் கட்சியில் தனக்கு போதிய முக்கியத்துவம் தராத நிலையில் அதிமுகவுக்கு வந்தார். அங்கு அவருக்கு எம்எல்ஏ வாய்ப்பு கிடைத்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இப்போது பாஜகவில் ராதாரவி இருக்கிறார்.
முதுமை மற்றும் உடல்நல பாதிப்புகள் காரணமாக, ராதாரவி இப்போது படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். தன் கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே நடிக்கிறார். ஏஆர் முருகதாஸ் இயக்கிய சர்க்கார் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் ராதாரவி கூறியதாவது, நாளைய தீர்ப்பு படத்தில் முதன்முறையாக நடித்த விஜய்க்கு நான் அப்பா கேரக்டரில் நடித்தேன். ரொம்ப கஷ்டமா இருக்கு, அந்த படத்தில் நீதான் அப்பாவாக நடிக்க வேண்டும் என்று எஸ்ஏசி கேட்டுக்கொண்டதால் நடித்தேன். ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை.
அதன்பிறகு எப்படியாவது தன் மகனை ஹீரோவாக்க வேண்டும் என்று எஸ்ஏ சந்திரசேகர்ல விஜயகாந்திடம் சென்று உதவி கேட்டார். உடனே ஒத்துக்கொண்டு செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் நடித்துக் கொடுத்தார். ஏனென்றால் எஸ்ஏசி மீது விஜயகாந்துக்கு நிறைய மரியாதை உண்டு.
விஜயகாந்துக்கு சிலை வைங்க என்பதெல்லாம் என் கருத்து அல்ல. விஜயகாந்த் செய்த உதவிக்கு கைமாறாக, விஜய் செய்ய வேண்டியது இதுதான். தன்னுடைய ஒரு படத்தில் விஜயகாந்த் மகன்களை முன்னிலைப்படுத்தி, அவர்களை நடிக்க வைக்க வேண்டும். அதை மட்டும் செய்தால் போதும். விஜயகாந்த் குடும்பத்துக்கு விஜய் செய்ய வேண்டியது அதுதான், என்று கூறியிருக்கிறார் நடிகர் ராதாரவி.





