நடிகை ராதிகா, தமிழ் சினிமாவில் இருக்கும் முக்கியமான சீனியர் நடிகைகளில் இவரும் ஒருவர். நடிகவேள் எம்ஆர் ராதா மகள், நடிகர் ராதாரவி சகோதரி, நடிகர் சரத்குமார் மனைவி என்ற முக்கிய அடையாளங்களை கொண்டிருக்கிறார். சமத்துவ மக்கள் கட்சியின் மகளிர் அணி நிர்வாகியாக இருக்கிறார்.
ராதிகாவை, கிழக்கே போகும் ரயில் படம் மூலம், தமிழ் சினிமாவுக்குள் கொண்டு வந்தவர் பாரதிராஜா. தொடர்ந்து பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக முக்கிய இடத்தை பிடித்தார் ராதிகா. கடந்த 1980-90களில் முன்னணி ஹீரோக்களுக்கு ராதிகா தான் அதிகமாக கதாநாயகியாக நடித்தார்.
அதுவும் விஜயகாந்த் நடித்த ஆரம்ப கால படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா. இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் பிரமாதமாக இருந்தது. அவர்களது காம்பினேஷனில் பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தும், சில காரணங்களால் அது நடக்காமல் போனது.
பெரிய திரை சினிமாவில் மட்டுமின்றி சின்னத்திரையில் ராடன் என்டர்பிரைசஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை பல சீரியல்களை தயாரித்து வரும் ராதிகா சித்தி, வாணி ராணி போன்ற சீரியல்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். சினிமாவை போலவே, சீரியல்களிலும் ராதிகா ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்தான்.
நாட்டாமை படத்தில், பொன்னம்பலம் தனது அம்மா மனோரமாவை தாய்க்கிழவி என்றுதான் அழைப்பார். அந்த வார்த்தை டிரண்டிங் ஆன நிலையில், சமீபத்திய தனுஷ் படங்களில் ஒன்றான திருச்சிற்றம்பலம் படத்தில், தாய்கிழவி என்ற வார்த்தையை முன்னிலைப்படுத்தி, ஒரு பாடல் காட்சியே வந்து, அதுவும் டிரண்டிங் ஆனது.
இதற்கிடையே காக்கா முட்டை படத்தை இயக்கிய மணிகண்டனிடம் அசோசியேட் இயக்குநராக பணிபுரிந்த சிவா என்பவர், இப்போது ஒரு படம் இயக்குகிறார். அந்த படத்தின் பெயர்தான் தாய்கிழவி. அந்த தாய்கிழவி கேரக்டரில் நடிப்பவர் நடிகை ராதிகா தான். பாட்டியை மையப்படுத்திய கதை என்பதாலும், அனுபவமிக்க ஒரு நடிகையால்தான் இந்த கேரக்டரை சிறப்பாக செய்ய முடியும் என்பதால், ராதிகா இந்த படத்துக்கு ஒத்துக்கொண்டு இருக்கிறார். அடுத்த மாதம் படப்படிப்பு துவங்க உள்ளது.





