தமிழ் சினிமாவில் இரண்டு சிகரங்களாக இருப்பவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். இப்போது நடிகர் ரஜினிகாந்த் 74 வயதிலும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் தொடர்ந்து நடிப்பது மட்டுமின்றி அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வரும் கமல்ஹாசன் இப்போது ராஜ்ய சபா எம்பியாகவும் பார்லிமென்டுக்குள் பணி செய்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இப்போது வேள்பாரி என்ற படத்தை இயக்க தயாராகி வருகிறார். அவர் கடைசியாக இயக்கிய இந்தியன் 2 கேம் சேஞ்சர் படங்கள் படுமோசமாக தோல்வியடைந்த நிலையில் அடுத்ததாக மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய 1 லட்சம் பிரதிகளை தாண்டி விற்பனையான வேள்பாரி வரலாற்று நாவலை சினிமாவாக எடுக்க உள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் 15 படங்களை இயக்கி உள்ள இயக்குனர் ஷங்கருக்கு கடைசியாக வெளிவந்த 2 படங்கள் மட்டுமே படுமோசமான தோல்வி படங்கள். மற்றபடி அவர் இயக்கிய மற்ற 13 படங்களுமே பெரிய அளவில் வெற்றிப் படங்கள்தான். குறிப்பாக ரஜினி நடித்த எந்திரன் சிவாஜி ரோபோ 2.0 போன்ற படங்களும் கமல் நடித்த இந்தியன் படமும் அர்ஜூன் நடித்த முதல்வன் போன்ற படங்களும் சக்கைப்போடு போட்டவை.
ஆனால் வேள்பாரி படம் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளது. தொடர்ந்து 2 தோல்வி படங்களை தந்த இயக்குனர் ஷங்கரை நம்பி அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க தமிழில் சினிமா தயாரிப்பாளர்கள் யாரும் முன்வராத சூழலில், வெளிநாட்டை சேர்ந்த ஒரு முக்கிய தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதே நேரத்தில் வேள்பாரி என்று ஏற்கனவே வெளியான நாவலை திரைப்படமாக உருவாக்கும்போது அந்த படத்தை காண மக்கள் வரவேண்டும். அப்போதுதான் அந்த படம் வெற்றியடையும். அதனால் சாதாரண ஹீரோக்கள் இந்த படத்தில் நடித்தால் எடுபடாது என்பதால், வேள்பாரி படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதற்கிடையே நடிகர்கள் ரஜினி, கமல் இருவரும் கடந்த 35 ஆண்டுகளாக இணைந்து நடிக்காமல் இருந்து வருகின்றனர். அதே நேரத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால்தான் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் வேள்பாரி படமும் பெரிய அளவில் வியாபாரம் ஆகும் என்ற நிலையில், இதற்கான ஆரம்பகட்ட முயற்சிகள் நடந்து வருகின்றன. விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.





