பாட்ஷா, பேட்டை படங்களை தொடர்ந்து ரஜினியை பற்றி மிகப் பெரிய அளவில் பேச வைக்கப்பட்ட படமாக ஜெயிலர் அமைந்தது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரஜினியின் கெத்தும், பக்காவான ஸ்டைலும், மாஸ் ஆக்ஷனும் படத்தை பெரிய வெற்றிக்கு அழைத்துச் சென்றது.
அதே போல், பீஸ்ட் படத்தின் விமர்சன ரீதியான தோல்விக்கு பிறகு விஜய் நடித்த லோகேஷ் கனகராஜ் படம் லியோ. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக படம் தோல்வி என்றாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனைகளை படைத்தது.
ஜெயிலர் படம் உலகம் முழுவதும் ரூ. 625 கோடிகளை குவித்த நிலையில், லியோ படம் இதுவரை 578 கோடி ரூபாய் குவித்துள்ளது. தமிழகத்தில் முதல் நாள் ரிலீஸ் அன்று லியோ ரூ. 148.5 கோடி வசூலித்ததாகவும், 12 நாட்களில் ரூ. 540 கோடி வசூலித்ததாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் உலகம் முழுவதும் என்ற நிலையில் வசூலில் ஜெயிலர் ரூ. 625 கோடிகளை கடந்து, லியோவை முந்தியுள்ளது.
ரஜினி, விஜய் ரசிகர்களுக்கு இடையே யார் சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு சொந்தம் என்ற மிகப்பெரிய பஞ்சாயத்து ஓடிய நிலையில், சூப்பர் ஸ்டாருன்னா, அவரு ஒருத்தர்தான் என லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசி, இந்த விவகாரத்துக்கு மிகப் பெரிய முற்றுப்புள்ளியை வைத்துவிட்டார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நடப்பாண்டு 2023ம் ஆண்டில், நமது பக்கத்து நாடான இலங்கையில் வெளியான தமிழ் படங்களில், வசூலில் டாப் 10 படங்கள் என்னென்ன, அந்த படங்கள் வசூலித்த வசூல் எவ்வளவு என்பது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இந்த படங்கள் வசூல் ரீதியான வரிசைப்படி முன்னிலை இடங்களை பிடித்துள்ளன.
ஜெயிலர் ரூ. 20 கோடி, லியோ ரூ. 17.9 கோடி, வாரிசு ரூ. 13 கோடி, பொன்னியின் செல்வன் 2ம் பாகம் ரூ. 12.6 கோடி, துணிவு ரூ. 6.6 கோடி, மாவீரன் 3.6 கோடி, வாத்தி மற்றும் ஜவான் படங்கள் தலா ரூ. 3.4 கோடி, பதான் ரூ. 1.3 கோடி, பத்துதல ரூ.1.2 கோடி என வசூலித்துள்ளது. இதில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர், லியோவை விட 2.1 கோடி ரூபாய் அதிகமாக வசூலித்து, இலங்கை வாழ் ரசிகர்கள் மத்தியில், ரஜினிதான் கெத்து என நிரூபித்து விட்டார்.





