70களில் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த ரஜினிகாந்த், 80களிலேயே சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார். அவர் தனது சம்பளமாக அப்போதே கோடிகளில் வாங்கிவந்தார். இந்த நிலையில் ஒரு இயக்குனரின் நிலையை அறிந்து அவருக்கு உதவுவதற்காக 2 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு நடித்திருக்கிறார் ரஜினிகாந்த்.

தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர்களில் ஒருவரான பாரதிராஜா, தனது சொந்த தயாரிப்பில் பல திரைப்படங்களை தயாரித்து இயக்கினார். சில படங்கள் வெற்றி கண்டாலும் சில திரைப்படங்கள் தோல்வியை கண்டன. அந்த சமயத்தில் பாரதிராஜா பண நெருக்கடிக்கு உள்ளானார். ரஜினிகாந்த் அந்த சமயத்தில் மிகப் பெரிய நடிகர். அவரது சம்பளம் கோடிகளில் இருந்தது.
ரஜினியை வைத்து படம் எடுத்தால் நாம் ஓரளவு பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பித்து விடலாம் என்று நினைத்தார் பாரதிராஜா. அதன்படி ரஜினிகாந்தை சென்று சந்தித்தார் பாரதிராஜா. பாரதிராஜா பொருளாதார நெருக்கடியில் இருப்பது ரஜினிகாந்திற்கு ஏற்கனவே தெரிந்திருந்தது.

“நாம் ஒரு படம் பண்ணலாமா?” என ரஜினிகாந்திடம் கேட்டாராம். அதற்கு ரஜினிகாந்த் “நிச்சயமாக பண்ணலாம்” என்று கூறியிருக்கிறார். அதன் பின் பாரதிராஜா தன்னால் முடிந்தமட்டும் ஒரு லட்ச ரூபாயை ரஜினிகாந்திற்கு அட்வான்ஸாக தந்திருக்கிறார்.
ஆனால் ரஜினிகாந்தோ பாரதிராஜாவிடம், “எனக்கு ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் எல்லாம் வேண்டாம். எனக்கு இரண்டு ரூபாய் கொடுங்கள் போதும்” என்று கூறி வெறும் இரண்டு ரூபாயை மட்டும் வாங்கிக்கொண்டாராம். “படம் முடியட்டும். அதன் பிறகு சம்பளத்தை குறித்து பேசிக்கொள்ளலாம்” என்று கூறினாராம். அவ்வாறு ரஜினிகாந்த் இரண்டு ரூபாய் அட்வான்ஸாக வாங்கிக்கொண்டு நடித்த திரைப்படம்தான் “கொடி பறக்குது”. ஆனால் ஒரு சோகம் என்னவென்றால், இத்திரைப்படம் வணிக ரீதியாக சரியாக ஓடவில்லை.





