ஜெய் பீம் என்ற ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ஞானவேல். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
காவலர்களின் கருணையற்ற செயலையும், அதனால் பாதிக்கப்படும் இருளர் இன மக்களின் வாழ்க்கையையும் எந்தவித சமரசமும் இல்லாமல் கண்முன்னே காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குனர் ஞானவேல். அதிலும் குறிப்பாக நடிகர் சூர்யாவின் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. மணிகண்டனும், அந்தக் கதாபாத்திரத்திலேயே வாழ்ந்து ரசிகர்களை பிரமிக்க வைத்தார்.
ஜெய் பீம் திரைப்படத்திலிருந்து ஒரே ஒரு குறை என்னவென்றால் அது திரையரங்கில் வெளியாகாமல் போனதுதான். நேரடியாக ஓ டி டி தளத்தில் அது ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், ஜெய் பீம் திரையரங்கை மிஸ் பண்ணி விட்டது என்று பலரும் கமெண்ட் செய்து வந்தனர். இப்படியான சூழலில் தனது அடுத்த திரைப்படத்திற்காக ரஜினியுடன் இணைந்து இருக்கிறார் ஞானவேல்.
லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதற்கு வேட்டையன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தில், இந்தி தெலுங்கு மலையாளம் என பல்வேறு திரையுலகில் இருந்து நடிகர் நடிகைகள் இடம்பெற்றுள்ளனர். முக்கியமாக அமிதாப்பச்சன் இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.
மலையாளத்தில் மஞ்சு வாரியர், ஃபகத் பாசில், தெலுங்கில் ராணா, அதுபோக ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இதன் சூட்டிங் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. திருவனந்தபுரத்தில் ஆரம்பித்து திருநெல்வேலி நாகர்கோயில் மும்பை சென்னை புதுச்சேரி என பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
இப்படியான சூழலில் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் போஸ்டரிலும் ரஜினிகாந்த் கருப்பு கண்ணாடியை அணிந்தபடியே இருக்கிறார். ஏற்கனவே வெளியான டீசரிலும் அவர் கண்ணாடி அணிந்தபடி இருந்திருந்தார். அப்போது இவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பதாக பலரும் கூறினர். தற்போது போஸ்டரிலும் அதே கெட்டப்பில் இருப்பதால் ஒருவேளை அது சரிதானோ என்று விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.




