மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற வரலாற்று நாவல் ஒரு லட்சம் பிரதிகளை தாண்டி விற்பனையானது. இதன் வெற்றிவிழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் ஷங்கர் எழுத்தாளர் சு வெங்கடேசன் நீயா நானா கோபிநாத் ஆனந்தவிகடன் ஆசிரியர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார்.
அந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் எவ வேலு எழுதிய ஒரு நூல் வெளியீட்டின் போது தான் பேசியது குறித்தும், அப்போது சொல்ல வந்த விஷயத்தை சொல்லாமல் மறந்து விட்டதாகவும் கூறினார். அதாவது திமுகவில் துரைமுருகன் போன்ற ஓல்டு ஸ்டூடண்ட்ஸ் கட்சியில் இருந்துக்கொண்டு பிரச்னை செய்வார்கள் என்று கூறிய பிறகு, சில விஷயங்களை சொல்ல மறந்ததை இந்த விழாவில் ரஜினி குறிப்பிட்டுச் சொன்னார்.
ஒரு அரசியல் கட்சிக்கு அனுபவசாலிகள்தான் பெரிய தூண்களாக அஸ்திவாரமாக இருப்பார்கள். கட்சிக்கு அடித்தளமே அவர்களை போன்ற சீனியர்கள்தான். சிகரமாக இருக்கும் அவர்கள் மிக முக்கியம். ஏனென்றால் அனுபவசாலிகள் இல்லாத கட்சி தேறாது என்று அன்று பேசாமல் விட்டுவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் வேள்பாரி விழாவில் குறிப்பிட்டுச் சொல்லி பேசினார்.
அனுபவசாலிகள் இல்லாத கட்சி தேறாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது, சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய நடிகர் விஜயை தான் என்று புதிதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. ஏனெனில் விஜய் துவங்கியுள்ள கட்சியில் விஜய் உள்பட பெரிய அரசியல் அனுபவசாலிகள் யாருமே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நடிகர் விஜய்க்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் யார் சூப்பர் ஸ்டார் என்பதில் ஒரு பஞ்சாயத்து ஏற்பட்டு அதில் ரஜினி காக்கா கழுகு கதை சொன்னதும் பெரிய அளவில் இணையத்தில் வைரலானது. இந்த விவாகரத்துக்கு ரஜினி விஜய் என இருவருமே தங்களது கருத்துகளை சொன்ன பிறகுதான், அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.
இந்த சூழலில், வேள்பாரி நூல் விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அனுபவசாலிகள் இல்லாத கட்சி தேறாது என்று கூறியிருப்பது, விஜயை மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசியிருப்பதாகவே இணையத்தில் பலரும் கூறி வருகின்றனர். ஆனால் அவர் திமுக அமைச்சர்கள் இருந்த சபையில் பேசாமல் விட்டதை தான் இங்கு குறிப்பிட்டுச் சொன்னாரே தவிர, விஜய் குறித்து அவர் பேசவில்லை என்றும் ஒரு தரப்பினர் மறுப்பு தெரிவித்தும் வருகின்றனர்.





