நடிகர் ராமராஜன் என்றாலே இப்போதும் அவரை ரசித்து அவரது படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். குறிப்பாக கடந்த 1980 90களில் அவர் நடித்த பல படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக இருந்திருக்கின்றன. ராமராஜன் கவுண்டமணி செந்தில் இளையராஜா கூட்டணியில் உருவான கிராமத்து படம் என்றாலே 100 நாட்கள் ஓடிய காலகட்டமாக அது இருந்தது.
குறிப்பாக ரஜினிகாந்த் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக ராமராஜன் தமிழ் சினிமாவில் ஒரு வசூல் மன்னராக இருந்தார். ராமராஜன் நடித்த சில படங்கள் ரஜினி கமல் நடித்த படங்களை விட அதிக வசூல் வேட்டை நடத்திய சம்பவமும் நடந்திருக்கின்றன. ஆனால் ராமராஜன் ஒரு போதும் தன்னை பெரிய ஸ்டார் ஹீரோவாக வெளிப்படுத்தி கொள்ளாத சிறந்த பண்பாளராக இருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ராமராஜன் கூறியதாவது, சினிமால பெரிய ஹீரோ ஆகணும்ன்னு நான் வரலே. சினிமாவில் நடிக்கிறோம். ஒரு நாலு சீன் எப்படியும் நடிச்சுப்புடுவோம் அப்படீன்னு தான் வந்தேன். கார் பங்களா சொத்து சுகம் அதெல்லாம் எனக்கு தேவையில்லை. முதல் படம் மீனாட்சி குங்குமம்.
அப்புறம் சின்ன பௌர்ணமி நிலவு ஒரு விடுகதை ஒரு தொடர்கதை பட்டம் பறக்கட்டும் தீராத விளையாட்டுப் பிள்ளை இப்படி சின்ன வேஷமா பண்ணிட்டு பத்து படம் நடித்தேன். 500 கோடி ரூபாய் கொடுத்தாலும் உயிரே போனாலும் சிகரெட் பிடிக்கிற மாதிரி மதுபானம் குடிக்கிற மாதிரி காட்சிகளில் நடிக்க மாட்டேன். அது எனக்கு பிடிக்கலே. இப்படியே மக்கள் மனசுல ராமராஜன் இருந்துட்டு போகட்டும் என்று நடிகர் ராமராஜன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
எம்ஜிஆரின் மிக தீவிரமாக ரசிகரான ராமராஜன் தனது படங்களில் சிகரெட் புகைப்பது மதுபானம் அருந்துவது போன்ற காட்சிகளில் நடிப்பதில்லை என்ற தீர்மானமான முடிவில் இருந்தவர். அதனால் என் ராசாவின் மனசிலே படத்தில் முதலில் ராமராஜன் தான் நடிப்பதாக இருந்தது.
ஆனால் அந்த படத்தில் படத்தின் நாயகன் மாயாண்டி புகைப்பிடிப்பது சாராயம் குடிக்கிற காட்சிகள் நிறைய இருந்ததால் ராமராஜன் நடிக்க மறுத்த நிலையில், பிறகு அந்த கேரக்டரில் நடிகர் ராஜ்கிரன் நடித்திருக்கிறார். இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்து தயாரிப்பாளர் ராஜ்கிரண், சினிமா கதாநாயகனாக மாறியதும் குறிப்பிடத்தக்கது.





