சமீபத்தில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ், தவெக கட்சி சார்ந்த பெண்களை மிகவும் கடுமையாக விமர்சித்த நிலையில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் நேரடியாக சென்னை போலீஸ் டிஜிபி அலுவலகத்துக்கு வந்து பொன்ராஜ் மீது புகார் மனு அளித்தார். தனது கட்சி சார்ந்த பெண்களை மிக கேவலமாக பேசிய பொன்ராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் தவெக தலைவர் நடிகர் விஜய் மீதும் அக்கட்சியின் சமூக வலைதள தொண்டர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சியில் இருந்த முன்னாள் பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பெண்களை இழிவாக பேசிய பொன்ராஜ் மீது நடிகர் விஜய் புகார் அளித்த நிலையில் இப்போது விஜய் மீதும் அதே குற்றச்சாட்டை வைத்து ரஞ்சனா நாச்சியார் புகார் தந்திருப்பது பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக தவெக கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் ரஞ்சனா நாச்சியார் இணைந்தார். அதன் பிறகு சமூக வலைதளங்களில் தன்னை தவெக கட்சியினர் மிக மோசமாக சித்தரிப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
விர்ச்சுவல் வாரியர்ஸ் என்ற பெயரில் தவெக கட்சியில் செயல்படுபவர்கள் தன்னை ஆபாசமாகவும் இழிவாகவும் பேசி வருவதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார். தனது கட்சி தொண்டர்கள் பெண்களை இழிவுபடுத்துவதை கண்டிக்க தவறிய தவெக தலைவர் விஜய் இதற்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
தவெக கட்சியில் இருந்து வெளியேறும் பெண்களை இணையதளத்தில் ஆபாசமாக சித்தரிக்கும் கலாச்சாரம் தவெக கட்சியில் இருப்பதாகவும் ரஞ்சனா நாச்சியார் கூறியிருக்கிறார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த பிறகு செய்தியாளரிடம் பேசிய ரஞ்சனா நாச்சியார் தவெக குறித்து மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார்.
அதுகுறித்து ரஞ்சனா நாச்சியார் கூறியதாவது, எரிபொருள் விலை உயர்வு மற்றும் லாக்டவுனை விட தவெக கட்சி மிகப்பெரிய ஆபத்தானது. நடிகர் விஜய் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். பெண்கள் வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்பதால் நேற்று விஜய் கொடுத்த புகார் ஒரு திட்டமிட்ட நாடகம் என்றும் அவர் ஆவேசமாக கூறினார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





