ஜெயம் ரவி அண்மையில் தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். அவருக்கு சமீபத்தில் வெளியான எந்த திரைப்படங்களும் சரி வர விமர்சனத்தை பெறவில்லை. பூமி திரைப்படத்தில் தொடங்கி இதுதான் நிலவி வருகிறது. அவருக்கு கடைசியாக மாபெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தது கோமாளி திரைப்படம் மட்டும்தான்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தாலும் அது தனியாக ரவி மோகன் திரைப்படம் என்று சொல்ல முடியாது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்த அகிலன், இறைவன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வந்த இடம் தெரியாமல் மறைந்து போயின.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான சைரன் திரைப்படமும், ரவி மோகனுக்கு எந்த ஒரு திருப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. தொடர்ந்து சிவா மனசுல சக்தி பட இயக்குனர் ராஜேஷ் உடன் கைகோர்த்து, பிரதர் திரைப்படத்தை கொடுத்தார் ரவி மோகன். ஆனால் இதுவும் கலவையான விமர்சனத்தைதான் பெற்றது.
இதனைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ரவி மோகன் மற்றும் நித்யா மேனன் நடித்த காதலிக்க நேரமில்லை திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியானது. விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் ஓரளவு பேசப்பட்டது. ஆனால் திரையரங்குகளில் ரசிகர்கள் குவியும் அளவுக்கு படம் வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில்தான் தனது ரூட்டை மாற்றி இருக்கிறார் ரவி மோகன். சுதா கொங்கரா – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக அவர் இடம் பெற்றுள்ளார். இதுபோக கராத்தே பாபு படத்திலும் அவர் நடித்து வருகிறார். டாடா படத்தை இயக்கியவர் எடுக்கும் இந்த திரைப்படத்தில் அவருக்கு அரசியல்வாதி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே அவர் நடித்திருக்கும் ஜீனி திரைப்படமும் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இப்படியான சூழலில் ரவி மோகன் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் யோகியுடன் இணைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநகரம் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த கார்த்தி யோகி, சந்தானத்தை வைத்து டிக்கிலோனா மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய இரண்டு திரைப்படங்களை எடுத்திருக்கிறார். இதில் வடக்குப்பட்டி ராமசாமி ஓரளவு வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் ரவி மோகன் கார்த்திக் யோகி இணையும் திரைப்படத்தின் சூட்டிங் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.





