இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், தக்லைப் என்ற படத்தின் ஷூட்டிங் சைபீரியாவில் நடந்து வருகிறது. கமல்ஹாசன், பார்லிமென்ட் தேர்தல் பிரசாரத்தில் பிஸியாக இருப்பதால், தற்காலிகமாக படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக கமல்ஹாசன், திரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள், சைபீரியாவில் படமாக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக இருந்த மலையாள நடிகர் துல்கர் சல்மான் திடீரென படத்தில் இருந்து விலகி விட்டார். கால்ஷீட் பிரச்னை காரணமாக அவர் விலகிவிட்டதாக கூறப்பட்டாலும், உண்மையான காரணம் எதுவென்று இதுவரை வெளிச்சத்துக்கு வரவில்லை. பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஆகியோரின் மார்க்கெட் சரிவு போல, தனக்கும் ஆகிவிடலாம் என்ற சென்டிமென்ட் காரணமாக அவர் விலகியதாகவும் ஒரு தகவல் அடிபடுகிறது.
இப்போது தக்லைப் படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்த நடிகர் ஜெயம் ரவியும் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில், ஏற்கனவே ஜெயம் ரவி நடித்திருந்தார். அதுவும் அருள்மொழி வர்மன் என்ற ராஜராஜ சோழனின் கேரக்டரை அவருக்கு மணிரத்னம் தந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி ஏற்கனவே மணிரத்னம் படத்தில் நடிப்பது தனக்கு மிகப்பெரிய பாக்கியம் என்று கூறிவந்த நடிகர் ஜெயம் ரவி, தக்லைப் படத்தில் இருந்து விலகியிருப்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் ஜெயம் ரவியின் மிக விருப்பமான நடிகர் கமல் நடிக்கும் படத்தில், அவருடன் நடிக்கும் வாய்ப்பை ஜெயம் ரவி எப்படி நழுவ விட்டார் என்பதும் பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.
இந்நிலையில், இயக்குனர் மணிரத்னம் படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியதற்கான உண்மையான காரணம் இப்போது தெரிய வந்துள்ளது. அதாவது மணிரத்னம் படத்தில் நடிப்பதற்காக ஒரு மாதம் கால்ஷீட் தந்திருக்கிறார் ஜெயம் ரவி. திடீரென ஒரு நாளுக்கு முன்னதாக அழைத்து, அந்த 30 நாட்கள் கால்ஷீட் வேண்டாம் என மறுத்து ரத்து செய்துள்ளனர். அதன்பிறகு மீண்டும் 30 நாட்கள் கால்ஷீட் தந்த நிலையில், அதே போல் ஒரு நாள் முன்னதாக அந்த 30 நாட்களும் வேண்டாம் என ரத்து செய்துள்ளனர்.
இப்படி இரண்டு முறை 30 நாட்கள், 30 நாட்கள் என தனது கால்ஷீட் தேதிகளை அவர்கள் ரத்து செய்ததால், மற்ற படங்களில் நடிக்க வேண்டிய லைன் அப்களையும் ஜெயம் ரவியால் நிர்வகிக்க முடியவில்லை. இப்படி தக்லைப் படத்திலும் நடிக்க முடியாமல், மற்ற படங்களில் நடிக்க வாய்ப்பில்லாமலும் போனதால், அதிருப்தியடைந்த ஜெயம் ரவி தக்லைப் படத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார். இப்படி மணிரத்னம், ஒரு முன்னணி நடிகரை இன்சல்ட் செய்யலாமா, என ரசிகர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.





