பொங்கல் ரிலீஸ் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி படம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு அஜீத்குமார் படத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்த படம் பொங்கலுக்கு வெளிவராமல் போக பல முக்கிய காரணங்களும், நெருக்கடிகளும் தடையாக இருந்துள்ளன.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் வலைப்பேச்சு அந்தணன் கூறியதாவது, எப்படியாவது பொங்கலுக்கு விடாமுயற்சி படத்தை கொண்டு வந்துவிட வேண்டும் என்றுதான் இயக்குனர் மகிழ் திருமேனி, நடிகர் அஜீத்குமார், இசையமைப்பாளர் அனிருத், படத்தில் பணிபுரிந்த படக்குழுவினர், லைகா நிறுவனம் என அனைத்து தரப்பிலுமே கடைசி வரை முயற்சித்தனர்.
விடாமுயற்சிக்காக 15 நாட்களுக்கு மேல் செய்ய வேண்டிய இசை பணியை 3 அல்லது 4 நாட்களுக்குள் முடிக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளான அனிருத், அப்படியும் இரவு பகலாக இசை பணியை செய்திருக்கிறார். மற்ற டெக்னீஷியன்களும் 3 நாட்களாக இரவு பகல் தூங்காமல் படத்தின் மற்ற பணிகளை கவனித்து விறுவிறுப்பாக செய்திருக்கின்றனர்.
இதற்கிடையே பாரமவுண்ட் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வந்தது. அதாவது பிரேக் டவுன் என்ற படத்தை தழுவி இந்த விடாமுயற்சி கதைக்களம் உருவாகி உள்ளதால், அவர்களது அனுமதி பெறவில்லை. அதற்காக ரூ. 30 கோடி வரை லைகா நிறுவனத்திடம் பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் கேட்ட நிலையில், அதுகுறித்த பஞ்சாயத்தும் ஓடிக்கொண்டே இருந்தது.
இந்த சூழலில் படத்தின் தயாரிப்பாளர் லைகா சுபாஸ்கரனிடம் இதுபற்றி கூறி, படத்தை ரிலீஸ் செய்துவிடலாம். உதயநிதி ஸ்டாலினின் சொந்த நிறுவனம் ரெட்ஜெயின்ட் மூவிஸ் படத்தை ரிலீஸ் செய்வதால் அவர்களால் தடுக்க முடியாது. அதனால் படம் ரிலீஸ் செய்துவிட்டு பிறகு இந்த பிரச்னையை சரிசெய்து கொள்ளலாம் என்று சிலர் அவரிடம் பேசியுள்ளனர்.
ஆனால் இதற்கு சுபாஸ்கரன் உடன்படவில்லை. பிரேக் டவுன் படத்தை ரீமேக் செய்து விடாமுயற்சி படத்தை எடுத்திருப்பதால் நிச்சயமாக அந்த தயாரிப்பு நிறுவனத்திடம் என்ஓசி வாங்கிய பிறகே படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். படம் ரிலீஸான பிறகு 30 கோடிக்கு பதிலாக ரூ. 300 கோடி நஷ்ட ஈடு கேட்கவும் வாய்ப்புள்ளது என்று அவர் உறுதியாக மறுத்திருக்கிறார். பட வேலைகள் முழுமையடையாமல் இருப்பது, ரீமேக் தொடர்பான பிரச்னை என இருபுறமும் நெருக்கடி என்ற நிலையில்தான் கடைசியில் பொங்கல் ரிலீஸ் இல்லை என்ற முடிவுக்கு லைகா வந்தது, என அந்தணன் அதில் தெளிவுபடுத்தி இருக்கிறார்.





