பல காலமாக துவண்டு கிடந்த கன்னட சினிமாவை, தலை நிமிரச் செய்யும் வகையில் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இதில் மிக முக்கியமாக கேஜிஎப் திரைப்படத்தை நாம் கூற வேண்டும். பிரசாந்த் நீல் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட இத்திரைப்படம், கன்னட சினிமாவையும் தாண்டி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
தமிழ் தெலுங்கு ஹிந்தி என திரையிட்ட இடங்களில் எல்லாம், வசூலை வாரி குவித்தது கேஜிஎப் திரைப்படம். அது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகமும் கன்னட திரை உலகம் பக்கம் பார்த்து பாராட்டியது. இப்படியான சூழலில் சாண்டல் வுட் எனப்படும் கன்னட திரை உலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் வெளியானது காந்தாரா திரைப்படம்.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த இந்த திரைப்படம், ஆன்மீக பாணியில் எடுக்கப்பட்டது. வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஒரு பக்கம், அந்த குறுநில பகுதிகளை ஆளும் ஜமீன் ஒரு பக்கம், அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான பிரச்சனை இன்னொரு பக்கம் என இந்த திரைப்படத்தின் கதையை பக்காவாக எழுதியிருந்தார் ரிஷப் ஷெட்டி.
மிக முக்கியமாக அதில் ஆன்மீகம் கடத்தப்பட்ட விதம் பலருக்கும் பிடிக்கும் வகையில் அமைந்திருந்தது. குலதெய்வ வழிபாட்டை முன்னிலைப் படுத்தியும், கடவுள் வழிபாட்டின் முக்கியத்துவத்தையும் இந்த திரைப்படத்தில் கூறியிருந்தார்கள். படத்தின் தொடக்க காட்சி மற்றும் இறுதி காட்சி என இரண்டும் மிகப் பிரமாதமாக எடுக்கப்பட்டிருந்ததால், காந்தாரா மிளிர்ந்தது.
இந்த சூழலில், அந்தத் திரைப்படத்தின் அடுத்த பாகத்தை எடுத்து இருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இது காந்தாராவின் முந்தைய பாகமாக வெளியாகிறது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை தூண்டி இருக்கும் இந்த திரைப்படத்திலிருந்து ட்ரெய்லர் அண்மையில் ரிலீஸ் செய்யப்பட்டது. மிகப்பிரமாண்டமான முறையிலும், பலரும் வியக்கும் அளவுக்கு அதில் காட்சிகள் இடம் பெற்று இருந்தன.
இந்த நிலையில் ட்ரெய்லர் வெளியான நாளன்று இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்க வரும்போது 24 மணி நேரத்திற்கு அசைவம் சாப்பிட்டிருக்கக் கூடாது மது அருந்தி இருக்கக் கூடாது புகை பிடித்து இருக்கக் கூடாது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் இடம்பெற்று இருந்தன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் முற்றிலுமாக ரிஷப் ஷெட்டி மறுத்திருந்தார். உணவு என்பது அவரவர்களின் அடிப்படை உரிமை என்று கூறியிருந்தார். தற்போது அளித்திருக்கும் பேட்டியில் அந்த போஸ்டர், தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வந்ததே இல்லை என்றும் அது ஒரு ஃபேன் மேட் போஸ்டர் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். இது வெளியாகும் போது எங்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





