தமிழில் ஏஸ் என்ற படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ருக்மணி வசந்த். கன்னட நடிகையான இவர் தமிழில் முதலில் அறிமுகமான ஏஸ் படம் பெரிய அளவில் வரவேற்பை வெற்றியை தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெறவில்லை. அதனால் இந்த படத்தில் அவர் நடித்தும் பெரிய அடையாளம் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் கவனம் பெற்றது. படம் முழுவதும் அவருக்கான கேரக்டர் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுக் கொடுத்தது.
ஆனாலும் பான் இந்தியா படமாக வெளியான காந்தாரா சாப்டர் 1 படத்தில் ருக்மணி வசந்த் நடிப்பும் கேரக்டரும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. குறிப்பாக மன்னர் ஜெயராமின் மகளாக இளவரசி கேரக்டரில் ருக்மணி நடிப்பு படத்துக்கே அடித்தளமாக இருந்தது. பல காட்சிகளில் அழகு பதுமையாக அவர் ரசிகர்களின் மனங்களை வென்றார்.
குறிப்பாக படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வில்லியாக மாறும் அவர் கதாநாயகனை எதிர்த்து நிற்பதும் தனது ஆவேசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் ருக்மணி வசந்த் ஒரு அழுத்தமான நேர்த்தியான கதாபாத்திரத்தை தன் மூலம் வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய நடிகை ருக்மணி வசந்த் கூறியதாவது, பாலிவுட் படங்களில் எனக்கு எப்போதுமே மிகுந்த ஆர்வம் இருந்து வருகிறது. சிறுவயதில் இருந்தே எனக்கு இந்தி மிகவும் பரிச்சயமான மொழியாக உள்ளது. எனது குடும்பம் ராணுவ பின்னணியை கொண்டது. வெவ்வேறு கண்டோன்மென்ட்களுக்கு இடையே இணைக்கும் மொழியாக இந்தி உள்ளது.
அதனால் இந்தி மொழியின் மீது எப்போதுமே எனக்கு ஒரு தீராத ஆர்வம் இருந்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை எனக்கு இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த மொழியில் எனது திறமையை நிரூபிக்க நான் மிகவும் ஆவலாக உள்ளேன். கடவுளின் அருளால் இந்தியில் என்னுடைய பயணம் விரைவில் தொடங்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என்று நடிகை ருக்மணி வசந்த் தனது நீண்ட கால ஆசையை கூறியிருக்கிறார்.





